சென்னை: உலக நிறுவனங்கள் தங்கள் மையங்களை திறக்க மிகவும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளதாக அனராக் மற்றும் எப்ஐசிசிஐ நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 250க்கும் மேற்பட்ட உலக நிறுவன திறன் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் சென்னை மட்டுமே இந்தியாவில் உள்ள மொத்த உலக நிறுவன திறன் மையங்களில் 10 சதவீத பங்கை கொண்டுள்ளது. இதையடுத்து, கோவை நகரம் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி சிறு நகரமாக உருவெடுத்துள்ளது.
டேட்டா சென்டர் துறையில் சென்னை மற்றும் மும்பை பெருநகர பகுதிகள் இந்தியாவின் மொத்த டேட்டா சென்டர் வசதிகளில் 70 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கின்றன. சென்னைக்கு அடுத்து, கோவை மற்றும் மதுரை நகரங்களும் புதிய டேட்டா சென்டர் மையங்களாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இது நாட்டிலேயே அதிகம். மேலும் 30 சிப்காட் தொழில் பூங்காக்களும் இங்கு உள்ளன. இவை உலக நிறுவனங்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீடு மற்றும் கட்டிட துறையிலும் தமிழ்நாடு நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2021 முதல் 2025 செப்டம்பர் வரையிலான காலத்தில் சென்னையில் 83,100 புதிய வீடுகள் கட்டப்பட்டன. அதே நேரத்தில் 85,200 வீடுகள் விற்பனையாகியுள்ளன என்று அனராக் குரூப்பின் சென்னை இயக்குநரும் நகர தலைவருமான சஞ்சய் சுக் தெரிவித்தார். ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் விலை வரம்பில் உள்ள நடுத்தர வீடுகளுக்கு அதிக தேவை உள்ளது. இந்த வகை வீடுகள் மொத்த புதிய வீடுகளில் 43 சதவீதம் ஆகும். சென்னையின் வணிக அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கிடங்கு துறைகள் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள், உலக நிறுவன திறன் மையங்கள் மற்றும் புதிய தலைமுறை நிறுவனங்களின் தேவை இதற்கு முக்கிய காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் மிகவும் நகர்ப்புற வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாகும். மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி விகிதம் 48 சதவீதமாக உள்ளது. இது, தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நிதியாண்டு 2025ல் மட்டும் தமிழ்நாடு 3.68 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. அக்டோபர் 2019 முதல் ஜூன் 2025 வரை மொத்தமாக 17.29 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதியாண்டு 2025ல் மட்டும் தமிழ்நாடு 3.68 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது.
