சென்னை: தமிழகத்தில் யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யானைகள் வழித்தடங்களை கண்டறிய குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல, யானைகள் வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக கால அட்டவணையையும் அரசு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசின் கால அட்டவணைப்படி யானைகள் வழித்தடம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அட்டவணைப்படி, நவம்பர், டிசம்பர் மாதங்களில் யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அட்டவணைப்படி பிப்ரவரி மாதத்திற்குள் இறுதி அறிக்கையை வெளியிடா விட்டால், அரசு நியமித்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் யானைகள் வழித்தடங்களை நீதிமன்றமே அறிவிக்கும் என்று தெரிவித்து விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
