நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் (துணை முதல்வர்): கலைஞரின் அன்புக்குரியவர்-தலைவர் மு.க.ஸ்டாலினின் அருமை நண்பர்-என் மீதும் எப்போதும் தனிப்பாசம் கொண்டிருப்பவர். 75வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்து, பவள விழாவையும்-திரையுலகில் பொன் விழாவையும் காணும் ரஜினி சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். இந்திய திரையுலகில் அன்றைக்கும்-இன்றைக்கும் முன்வரிசையில் ஒளிரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தொடர்ந்து நம்மை மகிழ்விக்கட்டும். அவர் இன்னும் பல்லாண்டு நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ந்திருக்க விழைகிறேன்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்த்திற்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): “இந்த நாள் மீண்டும் மீண்டும் வரவும், பலப்பல மகிழ்ச்சியை தந்து, வெற்றிகரமான நாளாக அமையவும், நீண்ட ஆயுளைப் பெற்று வாழவும் வாழ்த்துகிறேன். மேலும், திரைத்துறையில் இன்னும் மிக உயர்ந்த சிகரங்களை அடையவும் வாழ்த்துகிறேன்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): திரையுலகில் மின்னும் நட்சத்திரமாக இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 75வது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புமணி (பாமக தலைவர்): நடிகர் நண்பர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பிரசிடெண்ட் அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்): மதங்களைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொதுவானவராய் நடிகர் ரஜினிகாந்த் திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர் எல்லோருக்கும் யதார்த்தமானவர். இனி ஒருவர் உங்களைப்போல் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. திரை உலகிலும் நிஜ உலகிலும் ஒரே சூப்பர் ஸ்டார் நீங்கள் தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

இதேபோல தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தொலைபேசி வாயிலாக ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: