தென்காசி: செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கடந்த 3ம் தேதி தென்காசி கூலக்கடை பஜாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கறிஞரின் சொந்த ஊரான ஊர் மேலழகியானைச் சேர்ந்த லாரி உரிமையாளரான சிவசுப்பிரமணியன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது மனைவி ராஜேஸ்வரி, மைத்துனர் சதீஷ் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிவசுப்பிரமணியனை தனிப்படை போலீசார் கேரளா உள்ளிட்ட பல பகுதியில் தொடர்ந்து 8 நாட்களாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நாமக்கல் அருகே ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தென்காசி போலீசாரால் தேடப்பட்டு வந்த சிவசுப்பிரமணியனின் உருவத்துடன் ஒத்துப்போவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தென்காசி இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் நேற்று முன்தினம் சிவசுப்பிரமணியன் உறவினர்களை அழைத்துச் சென்று உடலை பார்வையிட்டார். இதில் இறந்தது சிவசுப்பிரமணியன் தான் என்பதும், இதுதொடர்பாக சேலம் ரயில்வே போலீசார் கடந்த 4ம் தேதியே வழக்குப்பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது. அதாவது கடந்த 3ம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை கொலை செய்த மறுநாளே சிவசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
