பெண்களுக்கு உரிமையை தாண்டி அதிகாரத்தை கொடுத்தது தமிழ்நாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: மற்ற மாநிலங்கள் எல்லாம் பெண்களுக்கு உரிமையை தர வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, உரிமை என்பதை தாண்டி பெண்களுக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு, திராவிட மாடல் அரசு, முதல்வர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசு என்றாலே அது ‘பெண்களுக்கான அரசு’ என்று தான் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பெண்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் மட்டுமல்ல, இன்றைக்கு ஒட்டு மொத்த இந்திய ஒன்றியமே இப்படிதான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வரும் போதும், அதில் மகளிர் முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படுத்தி வருகிறார். இன்றைக்கு பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றதையும், சாதிப்பதையும் பார்க்கும் போது, ஒவ்வொருவரும் இது தான் எங்கள் தமிழ்நாடு, இதுதான் எங்கள் தமிழ்பெண் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நம்முடைய மாநிலம் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு பெண்ணுரிமையில், இந்தியாவிற்கே, தமிழ்நாடு தான், முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்கள் எல்லாம், பெண்களுக்கு உரிமையை தர வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது, உங்களுக்கு ‘உரிமை’ என்பதை தாண்டி, ‘அதிகாரத்தை’ கொடுத்திருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு, திராவிட மாடல் அரசு, முதல்வர். 2021ல் தான் முதல்வராக பொறுப்பேற்ற அன்றே, அவர் போட்ட முதல் கையெழுத்து மகளிர்க்கான விடியல் பயண திட்டத்திற்கான கையெழுத்து. முன்பெல்லாம், வேலைக்கு வெளியில் செல்வது ஆண்களுடைய விசயமாக இருந்தது. ஒரு வீட்டில் வேலை செய்கின்றவர் அந்த குடும்பத்தினுடைய ஆண்களாக மட்டுமே இருக்கும். பெண்கள் வீட்டு வேலை செய்வது தான் மிக முக்கியமான வேலையாக, ஒரு பொறுப்பாக இருக்கும்.

இதற்கு ஒரு பழமொழியும் உண்டு, அதுதான் ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று சொல்வார்கள். உத்தியோகம் புருஷனுக்கு மட்டும் லட்சணம் கிடையாது. இன்றைக்கு உத்தியோகம் பெண்களுக்கும் லட்சணம் என்று மாற்றிக் காட்டிய அரசு திராவிட மாடல் அரசு. அதனால் தான், இன்றைக்கு, இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்ற பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் என்ற பெருமையோடு இன்றைக்கு நம்முடைய மாநிலம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்ற பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள்.

Related Stories: