சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் சொத்து முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரிஷியசை சேர்ந்த குளோபல் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஒன்றிய நிதி அமைச்சகத்தின் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் 2006ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ பதிவு செய்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கம் செய்து, அமலாக்கத் துறை உத்தரவிட்டது. இந்த சொத்து முடக்கத்தை உறுதி செய்து அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 2018ம் ஆண்டு ஜூன் மாதம் தனக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், அதற்கு முன்பே சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது. சொத்துக்கள் முடக்கம் செய்த போது தனக்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே, அமலாக்கத் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
