நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி என்சிசி மாணவிகள் 300 பேருக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி

தியாகராஜ நகர் : நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளின் என்சிசி மாணவிகள் 300 பேருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. என்சிசி சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான துப்பாக்கி சூடுதல் தகுதி பயிற்சி நிகழ்ச்சி மண்டல மாநில அளவில் நடத்தப்பட்டு தகுதியுள்ள என்சிசி மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2027ம் ஆண்டு குடியரசு தின விழா போட்டியில் பங்கேற்பதற்காக இப்போதே முதற்கட்ட துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகில இந்திய அளவில் முகாம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

அந்த வரிசையில் என்சிசி மகளிர் 3ம் படை பிரிவு மாணவிகளுக்கு துப்பாக்கிச் சூடு பயிற்சி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் என தொடர்ந்து இரு நாட்கள் நடத்தப்பட்டது.

இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் என்சிசி மாணவிகள் 300 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு ராணுவ அதிகாரி கமாண்டிங் கர்னல் டி எஸ் சமந்த் (சேனா மெடல்) தலைமையில் பாயிண்ட் 22 துப்பாக்கி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

ரிசில்தார் மேஜர் ஜவாலா பிரசாத், சுபேதார் சுனில் குமார் என்சிசி முதல் நிலை அலுவலர்கள் கிறிஸ்டியான், கவிதா, 2ம் நிலை அலுவலர் செல்வி மற்றும் என்சிசி பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். என்சிசி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றனர்.

இந்த பயிற்சியில் சிறப்பிடம் பெறும் மாணவிகள் அடுத்த கட்டமாக மதுரையில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த ஆண்டு குடியரசு தின போட்டியில் பங்கேற்க உள்ள தேசிய தகுதி போட்டியில் கலந்து கொள்வார்கள்.

கடந்த ஆண்டு மகளிர் 3ம் படை பிரிவில் பயிற்சி பெற்ற என்சிசி மாணவிகளின் பர்வதவர்த்தினி என்பவர் டெல்லி நிகழ்ச்சியில் பகுதி பெற்று பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: