திருப்புத்தூர், டிச.8: திருப்புத்தூரில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சப்பரம் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த நவ.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8ம் நாளான நேற்று முன்தினம் இரவு திருப்புத்தூர் பங்குத்தந்தை அற்புதஅரசு தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று சப்பரங்களும் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அலங்கரிக்கப்பட்ட முதல் சப்பரத்தில் புனித மைக்கேல் அதி தூதர் சொரூபமும், மற்றொரு சப்பரத்தில் புனித அமல அன்னை சொரூபமும் வைக்கப்பட்டு ஆலயத்திலிருந்து தேர் பவனி தொடங்கியது. முன்னதாக சப்பரங்களில் தோன்றிய சொரூபங்களுக்கு தூபம் காட்டப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு பிரசங்கம் செய்யப்பட்டு, அன்னையின் திரு உருவ சொரூபம் தாங்கிய சப்பரம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு அஞ்சலக வீதி, பேருந்து நிலையம், காரைக்குடி சாலை, தேரோடும் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, அமல அன்னையின் பாடல் ஒலித்தவாறு, வாண வேடிக்கைகள் முழங்க பவனி வந்து மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் சப்பரத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் அனைவரும் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.
