போதையில் வாலிபர் ஓட்டிய கார் மோதி 5 வாகனம் சேதம்

மாதவரம், டிச.8: போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பைக் உள்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று தறிகெட்டு ஓடி, பைக்கில் சென்ற நபர் மீது மோதியது. இதனால் பொதுமக்கள் அந்த காரை பிடிக்க முயன்றபோது அதிவேகமாக சென்றுவிட்டது.

இதன்பின்னர் கொளத்தூர் திருவீதி அம்மன் சாலை, காமராஜர் சாலை, பெரியார் நகர் மின்சார வாரிய அலுவலகம் வழியாக வேகமாக சென்ற அந்த கார், அடுத்தடுத்த வாகனங்களை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வில்லிவாக்கம், அயனாவரம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதன்பின்னர் அயனாவரம் பகுதியில் அந்த காரை போலீசார் பிடித்து, காரை ஓட்டிவந்தவரிடம் விசாரித்த போது, கொளத்தூர் ஜவகர் நகர் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த அசோக் (28) என்பதும், அவர் போதையில் இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக்கை ைகது செய்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: