ஆராய்ச்சி மாணவர்களுக்காக வருகிறது புதிய இணையதளம்: தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டம்

சென்னை: ஆராய்ச்சி மாணவர்களுக்காக புதிய இணையதளத்தை தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் உருவாக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலானோர், பாடநெறிப் பணிகளை முடிப்பது, வெளிநாட்டு தேர்வாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும், இதனால் ஆராய்ச்சி படிப்புகளை முடிக்க தாமதமாவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

தற்போது வரை 47 ஆயிரம் பேர் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு தீர்வை அளிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் புதிய இணையதளத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் இருந்து இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய இணையதளம், மாநிலத்தில் உள்ள ஆராய்ச்சித் தரத்தை உயர்த்துதல், அதிகரித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாக கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது.  இந்த தளத்தில் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களின் தரவுகளும், அவர்களுடைய அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளும் சேகரிக்கப்படுவதோடு, ஆராய்ச்சி மாணவரின் ஒரு தலைப்பை மற்றொரு பல்கலைக்கழக, கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள் தேர்வு செய்வதும் முற்றிலும் தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.

இதில் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்ததும், ஒவ்வொரு ஆராய்ச்சியாளரின் நேரடி நிலை முன்னேற்றம் மேற்பார்வையாளர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், உயர்கல்வித் துறையால் எளிதில் அணுக முடியும் எனவும், குறிப்பிட்ட காலத்துக்குள் ஆராய்ச்சி படிப்புகளை நிறைவு செய்ய இது உதவிகரமாக இருக்கும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கூடுதல் கவனத்தை செலுத்த ஏதுவாகவும் இது அமையும் எனவும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் வட்டாரம் தெரிவிக்கிறது.

Related Stories: