சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் செல்லும் போது, சென்ட்ரல் மற்றும் உயர் நீதிமன்றம் இடையே சுரங்கப்பாதையில் தொழில்நுட்ப கோளாறால் பழுதாகி மெட்ரோ ரயில் நின்றது. இதனால் பெட்டியில் வெளிச்சம் இன்றி 10 நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு அவசர கதவின் வழியாக பயணிகள் பத்திரமாக டனல் வழியாக வெளியேறினர். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் சென்னை முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பாதிக்கப்படாமல் வேகமாக நடந்து வருகிறது.
குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் சென்னை வாசிகளுக்கு உதவியாக உள்ளது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம் செல்வோர் எந்தவித போக்குவரத்து இடையூறுமின்றி அதிநவீன வசதிகள் மற்றும் குளுகுளு வசதிகளுடன் சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை மெட்ரோ ரயில் சென்றது.
சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சுரங்கப்பாதை வழியாக விம்கோ நகர் நோக்கி செல்லும் போது, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.30 மணி அளவில் புறப்பட்ட 500 மீட்டர் தொலைவில், அதாவது சென்ட்ரல் – உயர் நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிறுத்தத்திற்கு இடையே சுரங்கப்பாதையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நின்றது. நிற்கும் போது, 3 பெட்டிகளில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்து விட்டது. குளிர்சாதன பெட்டி என்பதால் மெட்ரோ ரயில் பெட்டி ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது.
இதனால் காற்று வசதி இல்லாமல் பெட்டியில் இருந்த பயணிகள் என்ன என்று தெரியாமல் அச்சமடைந்தனர். அதேநேரம் சென்னையில் 2 நாட்களாக கன மழை பெய்து வருவதால், மெட்ரோ ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகள் சுரங்கப்பாதையில் தண்ணீர் புகுந்து விட்டதா என்று அச்சமடைந்தனர். அப்போது, மெட்ரோ ரயிலை இயக்கிய பைலட் பெட்டிக்குள் வந்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகியுள்ளது. யாரும் அச்சமடைய தேவையில்லை என்றார். ஆனால் பயணிகள் சுரங்கப்பாதையில் நின்றதால் என்ன செய்வது என்று தெரியாமல் சத்தம் போட தொடங்கினர்.
உடனே பைலட் மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறையை தனது வாக்கிடாக்கி மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். அவர்கள் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய 20 நிமிடங்கள் ஆகும். எனவே பயணிகளை அவசர வழியாக வெளியேற்றி ‘டனல்’ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தினர். மேலும், எந்த காரணத்தை கொண்டும் டனலில் உள்ள தண்டவாளத்தின் இடையே செல்லாமல், பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட வழியாக செல்ல வேண்டும் என்று கூறினர்.
அதேநேரம் சுரங்கப்பாதை என்பதால் பயணிகளின் செல்போனில் டவர் கிடைக்காததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் ஒரு வழியாக பைலட் மெட்ரோ ரயிலின் அவசர வழியாக அனைத்து பயணிகளையும் செல்போன் டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் வெளியேற்றினார். டனலில் இருபுறங்களிலும் மின்விளக்கு எரிந்தது. இருந்தாலும் பயணிகள் தங்களது செல்போன் டார்ச் வெளிச்சத்துடன் பைலட் கூறிய அறிவுரைப்படி பழுதாகி நின்ற மெட்ரோ ரயிலில் இருந்து சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பொடி நடையாக ‘ஹாலிவுட் திரைப்பட காட்சிகள்’ போல் வந்தடைந்தனர்.
பின்னர் மெட்ரோ தொழில்நுட்ப நிபுணர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்று பழுதாகி நின்றி மெட்ரோ ரயிலை சரிசெய்து மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்புக்கும் மெட்ரோ ரயில் இணைப்புக்கும் இடையே ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் மெட்ரோ ரயில் பெட்டிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் மெட்ரோ ரயில் பெட்டியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு அவசர மின் விளக்குகள் கூட எரியாத நிலை ஏற்பட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சுரங்கத்தில் பழுதாகி நின்ற 10 நிமிடத்தில் மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றிய மெட்ரோ ரயில் பைலட்டுக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர். அதேநேரம் சுரங்கப்பாதையின் இடையே மெட்ரோ ரயில் பழுதாகி நின்றது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இனி இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு ஏற்படாது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரைமணி நேரத்திற்கு பின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 6.20 மணி முதல் மீண்டும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. சென்னையில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், மெட்ரோ ரயிலில் சிக்கிக்கொண்ட பயணிகள் சுரங்கப்பாதையில் தண்ணீர் புகுந்து விட்டதா என்று அச்சமடைந்தனர்.
