சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93வது பிறந்த நாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலகிற்கு’ திமுக இளைஞர் அணியின் சார்பில் நன்கொடையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை வரும்போது, பாம்பை கொன்று எப்போதுமே கீரி தான் ஜெயிக்கும். ஆனால், பாம்பிடம் கடிபட்ட அந்த கீரி, அந்த பாம்பின் விஷத்தை போக்கிக் கொள்ள, அதற்கு மட்டுமே தெரிந்த ஒரு மூலிகையில் விழுந்து புரளும். அப்படி, பொது வாழ்வில் பல பாம்புகளிடம் கடிபடும் நான், பெரியார் திடலுக்கு வந்து பெரியார் எனும் மூலிகையை தடவினால் அந்த விஷமெல்லாம் முறிந்துபோகும் என்று கலைஞர் குறிப்பிட்டு சொன்னார்.
கலைஞரை மட்டுமல்ல, முதல்வரை மட்டுமல்ல, என்னையும் சில நேரங்களில் நிறைய பாசிச பாம்புகள் சீண்டிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, எங்களுக்கும் பெரியார் திடலின் மூலிகை கண்டிப்பாக தேவைப்படும். எனவே நாங்களும் அடிக்கடி பெரியார் திடலுக்கு வருவோம். மும்மொழிக் கொள்கை, எஸ்ஐஆர், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் என பாசிஸ்ட்டுகள் எவ்வளவு சூழ்ச்சிகளை செய்தாலும், அது எல்லாம் ஒரு போதும் தமிழ்நாட்டில் எடுபடாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாசிஸ்ட்டுகளையும், அவர்களின் அடிமைகளையும் வீழ்த்த நாம் ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும்.
200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதே நமது இலக்கு. அந்த இலக்கை அடைய, நாம் அனைவரும் சேர்ந்து அயராது உழைப்போம். அதற்கான உறுதியை, ஆசிரியர் பிறந்த நாளில் நாம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வி.அன்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம்
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சி.எஸ்.ஐ. மெட்ராஸ் டையோசீஸ் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ்- 2025 நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
