தூத்துக்குடி அருகே கார் லைட் அணைக்காத தகராறில் நிதி நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் மீது சரமாரி தாக்குதல்

*2 வாலிபர்கள் கைது; 4 பேருக்கு வலை

ஸ்பிக் நகர் : தூத்துக்குடி அருகே சாலையில் வந்த போது கார் லைட்டை அணைக்காததால் ஏற்பட்ட தகராறில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உள்பட 4 பேரை தாக்கிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் 4 பேரை தேடி வருகின்றனர்.தூத்துக்குடி முள்ளக்காடு வடக்கு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் லிங்கபிரதீஷ்(32). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 23ம்தேதி தனது நண்பர்களான கோகுல்நாத், சத்யசீலன், பொன் சரவணகுமார் ஆகியோருடன் சேர்ந்து நண்பரான சரவணன் திருமண நிச்சயதார்த்தில் பங்கேற்பதற்காக கூட்டாம்புளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். பொட்டல்காடு அருகே வரும்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர்.

அப்போது அந்த சாலையில் பைக்கில் வந்த இருவர், கார் ஹெட்லைட்டை அணைக்க முடியாதா? என கேட்டு லிங்க பிரதீஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து லிங்க பிரதீஷ் உள்பட 4 பேரும் அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் உள்ள பொட்டல்காடு விலக்கு பகுதியில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். இதனிடையே, ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட இருவரும் தங்களது கூட்டாளிகள் 4 பேரை அழைத்துக் கொண்டு டீக்கடைக்கு வந்து லிங்கபிரதீஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதோடு சரமாரியாக தாக்கினர்.

இதை அங்கிருந்தவர்கள் தட்டிக் கேட்டதால், அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றது.இதுகுறித்து லிங்க பிரதீஷ் முத்தையாபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த எஸ்ஐ ராமகிருஷ்ணன், பொட்டல்காடு வடக்கு தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் ஆகாஷ்(20), முருகேசன் மகன் கரன்குமார்(21) ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: