கரூர்: கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் நேற்று 2வது நாளாக சிபிஐ விசாரணை நடந்தது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, கரூர் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் தனித்தனியாக ஆஜரான 5 பேரிடம் 10 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கரூர்-கோவை சாலையில் உள்ள ஓட்டலில் தங்கினர். நேற்று 2வது நாளாக காலை 10 மணியளவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிபிஐ விசாரணை அலுவலகத்திற்கு வந்தனர். இவர்களை தொடர்ந்து நிர்மல்குமார், மதியழகன் ஆகியோரும் வந்தனர். தனித்தனியாக ஆஜரான அவர்களிடம், கூட்டம் நடத்துவதற்கு எந்த தேதியில் அனுமதிக்கான கடிதம் காவல்துறையிடம் கொடுத்தீர்கள், தலைமை அலுவலக கடிதத்துடன், மாவட்ட அலுவலக கடிதமும் கொடுக்கப்பட்டதா?
காவல்துறை அனுமதி அளித்த இடத்திலேயே கூட்டம் நடத்த உடனே சம்மதம் தெரிவித்தீர்களா? கூட்டத்திற்கு ரசிகர்கள் இவ்வளவு பேர்தான் வருவார்கள், அதற்கு காவல்துறை அளித்த இடமே போதுமானது என முடிவு செய்தீர்களா? நெரிசலில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டதா? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல் எத்தனை மணிக்கு தெரியவந்தது, அப்போது விஜய், கரூர் மாவட்டத்தில் இருந்தாரா அல்லது பக்கத்து மாவட்டத்திற்கு சென்றாரா? அவருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டதா? போன்ற கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் அவர்களது வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு வெளியே வந்தனர். இதில் 4 பேரும், சிபிஐ அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிபிஐ அதிகாரிகளிடம் பிரசார கூட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் நடந்த சம்பவங்கள் குறித்தும், சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்கள் குறித்தும் தெரிவித்துள்ளோம். எங்கள் தரப்பிலிருந்து சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளோம். எங்கள் தரப்பு விளக்கத்தையும் அளித்துள்ளோம். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாலும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும் அதனை வெளிப்படையாக கூற முடியாது. தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் மீண்டும் ஆஜராக தயாராக உள்ளோம். எங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்’ என்றார்.
* விஜய்யிடமும் விரைவில் விசாரணை
தவெக தலைவர் விஜய்க்கு, ‘சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்களா’ என்ற கேள்விக்கு, ‘அது குறித்து எங்களுக்கு தெரியாது. விசாரணைக்கு தேவைப்படும் போது அதிகாரிகள் அவரை அழைப்பார்கள்’ என நிர்மல்குமார் தெரிவித்தார். விஜய் காலதாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணமா என்ற கேள்விக்கு, உங்களுக்கே (நிருபர்களுக்கு) தெரியும். ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்தை கடந்து வருவதற்கே ஒரு மணி நேரம் எடுத்தது. இருசக்கர வாகனங்கள், கார்களில் மக்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் எங்களது தன்னார்வலர்களை கொண்டு கட்டுப்படுத்த இயலவில்லை. தற்போது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட மண்டபம் அல்லது இடங்களில் நடைபெறுகிறது. மீண்டும் திறந்தவெளி இடங்களில் நடைபெறும் விவகாரம் குறித்து கட்சி தலைமையுடன் நிர்வாகிகள் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தற்போது அதுகுறித்து இங்கு கூறத்தேவையில்லை என்றார்.
* தவெகவில் செங்கோட்டையன் பதிலளிக்க மறுப்பு
வரும் 27ம்தேதி (நாளை) அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக கூறப்படுகிறதே’ என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, ‘அதுபற்றி இங்கு கூறத்தேவையில்லை’ என்று நிர்மல்குமார் தெரிவித்தார்.
