சென்னை: விஜய் பிரசாரம் செய்ய வந்தால் 4 பக்கமும் சாலையை ஒரு மணி நேரம் மூடுங்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் அளித்த ஒரு புகார் மனுவை அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் அவரது சார்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை அளித்தோம். பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தபிறகு, பெரம்பூர் காவல்துறை அங்குள்ள ரோடுகளை பிளாக் செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவரை பேச வைத்திருக்க வேண்டும். பெரம்பூரில் இருந்து கொளத்தூரில் காவல்துறை அனுமதி கொடுத்த இடத்திற்கு நாங்கள் போவதற்குள், அளவுக்கு அதிகமான பேருந்துகளை விட்டார்கள். கொளத்தூரில் எந்த காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் சுத்தமாக இல்லை.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற இடத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லை. எங்கள் தலைவர் பிரசாரத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே காவல் துறை எந்த இடத்துக்கும் அனுமதி கொடுப்பதில்லை. நாளை (இன்று) திருச்சியில் விஜய் வேட்புமனு தாக்கல் முடித்துவிட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சாலை வழியாக மக்களை சந்திக்கிறார், பேச இருக்கிறார். அதற்கு தமிழகம் முழுவதும் விஜய் பாதுகாப்புக்கும் அவரை பார்க்க வரும் மக்கள் பாதுகாப்புக்கும் காவல் துறை தான் பொறுப்பு. விஜய் வரும்போது அந்த சாலையை ஒரு மணி நேரம் மூட வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சொல்லி இருக்கிறார். மற்ற கட்சி மாநாட்டில் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டத்துக்கு அப்படி அல்ல. கொளத்தூரில்கூட 200 பேருக்கு மேல் கூப்பிடாதீர்கள் என்று சொல்லி இருந்தோம். ஆனால் ரோட்டில் வந்து பேசினால் என்ன பிரச்னை வரும் என்று நீங்களே பார்த்திருப்பீர்கள். திடீர்னு பெண்கள் எங்கிருந்தோ ஓடி வருகிறார்கள். எங்களுக்கே, எங்கு இருந்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. அதனால், அங்குள்ள 4 சாலையையும் பிளாக் பண்ணி நிப்பாட்டினால், அந்த கூட்டம் ஒரே இடத்தில் ஜாம் ஆகாது. இதைத்தான் நாங்கள் அப்போதிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.
* ஜெயலலிதா இருக்கும் வரைதான் அதிமுக
திமுகவின் முதன்மை எதிரியாக இருக்கிற அதிமுகவினர் எளிமையாக பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், தவெகவுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி பிரச்னை இருக்கிறது? திமுகவின் முதன்மை எதிரி அதிமுக என்று நீங்கள் நினைக்கிறது, ஜெயலலிதா இருக்கிற வரைக்கும்தான். ஜெயலலிதா எப்போது இறந்தாரோ அப்போதே அது போய்விட்டது. அதிமுக 3 தேர்தல் இல்ல… 10 தேர்தலுக்கு மேல் தோல்வியுற்றது.
இன்றைக்கு மு.க.ஸ்டாலினுக்கு ஒரு எளிமையான எதிரி இபிஎஸ் இருந்தா போதும் என்று, அவங்க பிரசாரம் ரொம்ப எளிமையா போயிட்டு இருக்காங்க. ஆனால் இன்னைக்கு கிரவுண்டில் போட்டி தவெகவுக்கும் திமுகவுக்கும்தான். அதனால்தான் எங்களுக்கு கடுமையான அழுத்தங்கள். திமுக – தவெக என்கிற சண்டை தொடங்கி விட்டது. அந்த சண்டையில் நாங்கள் பிரசாரம் பண்ணக்கூடாதுன்னு அழுத்தம் கொடுக்கிறார்கள் என ஆதவ் கூறினார்.
* டிஜிபி, கமிஷனர்கள், உளவுத்துறை அதிகாரியை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்
வில்லிவாக்கத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது பக்கத்தில் இருக்கும் ஒரு மேன்ஷனில் இருந்த இரண்டு பேர் பாட்டிலை வைத்து அடித்து, ஒரு பெண் முட்டியில் பட்டு அவர் மயக்கம் அடைந்து, அட்மிட் பண்ணியிருக்காங்க. மிகப்பெரிய போராட்டம் பண்ணுவோம் என்று நாங்கள் சொன்னபிறகு காவல்துறை கைது செய்துள்ளனர். அந்த அறையில் 4, 5 பாட்டிலை உடைத்து ஏற்கனவே வைத்திருந்தார்கள். இந்த பிரச்னையை திட்டமிட்டு செய்துள்ளதாக ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகாராக கொடுத்துள்ளோம்.
இப்போது காவல்துறையை நாங்கள் நம்பவில்லை. சென்னை போலீஸ் கமிஷனரை முதலில் வேறு மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும். உளவுதுறை ஏடிஜிபி ரேங்கில் இருப்பவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும். டிஜிபி, ஆயதப்படை ஏடிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும். இதையெல்லாம் எங்கள் கோரிக்கையாக தேர்தல் அதிகாரியிடம் சொல்லி இருக்கிறோம் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
