வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், 2021 சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பரம் வெளியிட வேண்டும். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பறக்கும் படைகளை நியமிக்க வேண்டு. பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் தொடர்பு எண்களை வெளியிட வேண்டும்.

பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அதுவரை தேர்தல் ஆணையம் செய்த செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது கட்சியின் தலைவரிடமிருந்து வசூலிக்க வேண்டும். கருப்புப் பண நடமாட்டத்தை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்குது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், முதலமைச்சரின் வாகனத்தையே பறக்கும் படையினர் சோதித்துள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறது என்றார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2,169 பறக்கும் படைகளும், 2,166 கண்காணிப்பு குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளன என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: