சென்னை: நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி விசிக எம்எல்ஏவான ஆளுநர் ஷாநவாஸுக்கு இந்த முறை கட்சி தலைமை போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இதனால் ஏன் அவருக்கு சீட் வழங்கவில்லை என்று விசிக தொண்டர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: எனக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன். ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும்.
அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும். அந்த வகையில், 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம். எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
