மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி: வைகோ திடீர் அறிவிப்பு

சென்னை: மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிடும் வகையில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக கடந்த 28ம் தேதி வேட்பாளர்களை அறிவித்தது.

மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில், மொடக்குறிச்சி – செந்தில் நாதன், மதுரை தெற்கு – பூமிநாதன், கடையநல்லூர் – ராஜேந்திரன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும், சீர்காழி(தனி) – செந்தில் செல்வன் தனி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்நிலையில், சீர்காழி(தனி) தொகுதியில் போட்டியிடும் செந்தில் செல்வனும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று வைகோ நேற்று அறிவித்துள்ளார்.

* 6ம் தேதி முதல் பிரசாரம்
வைகோ வரும் 6ம் தேதி பிரசாரம் தொடங்குகிறார். அன்று மாலை கடையநல்லூர் தொகுதியிலும், 7ம் தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார், தொடர்ந்து, 21ம் தேதி மதுரை தெற்கு தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

* முதல்வர் நன்றி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஆருயிர் அண்ணன் வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க. வெல்வோம் ஒன்றாக’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: