சேவா தள பிரிவு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆளுக்கொரு பக்கம் சீட் கேட்டு சத்தியமூர்த்திபவன் முற்றுகை: பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னை: மகிளா காங்கிரஸ், சேவாதள பிரிவு நிர்வாகிகள் தங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கேட்டு சத்தியமூர்த்திபவன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் தங்களுக்கு ஒதுக்கப்ப்டட 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலலை வெளியிடவில்லை.

வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக டெல்லி காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தலைமையில் மேலிட தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய காங்கிரஸ் தேர்வுக்குழு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தது. இந்த பட்டியல் ராகுல்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ராகுல்காந்தி அந்த வேட்பாளர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் கொடுக்காமல் மீண்டும் புதிய வேட்பாளர் பட்டியலை தயார் செய்ய கூறியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் தமிழக காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரிவு தலைவர்கள் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மேலிடத்தை அணுகி வந்தனர். அவர்கள் பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சேவாதள பிரிவு தலைவர் குங்பூ விஜயனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி சத்தியமூர்த்திபவனை அவர்களது ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதனால் காலை முதல் பரபரப்பு எழுந்தது. வேட்பாளர் பட்டியலில் தங்களது தலைவர்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டதாகவும், தங்களுக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருபுறம் காங்கிரஸ் சேவா தள பிரிவும், மறுபுறம் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். அப்போது, திருச்சியை சேர்ந்த லட்சுமி என்ற சேவாதள நிர்வாகி தனது மீது டீசலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு கூடியது. அங்கிருந்த கட்சியினர் அவரை மடக்கி காப்பாற்றினர்.

இதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், போராட்டம் நடத்தியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் அகில இந்திய காங்கிரசிடம் தெரிவிக்கப்படும் என்றும், தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களால் சத்தியமூர்த்திபவனில் பதற்றமான நிலை உருவானது. பாதுகாப்பு கருதி போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

Related Stories: