ஒரு கோடி பேருக்கு வேலை, பூரண மதுவிலக்கு: அன்புமணி பாமக தேர்தல் அறிக்கை

சென்னை: பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, பூரண மதுவிலக்கு, ரூ.10க்கு மக்கள் சாப்பாடு உள்ளிட்ட 274 வாக்குறுதிகளை வெளியிட்டு அதை நிறைவேற்றுவேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக தேர்தல் அறிக்கையை சென்னை தி.நகரில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். வேலைவாய்ப்பு, மதுவிலக்கு, விவசாயம் ஆகிய மூன்று முக்கியப் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் சில: தமிழ்நாட்டில் அரசு, தனியார் மற்றும் சுயதொழில் என ஒட்டுமொத்தமாக 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். முதல் இரண்டு ஆண்டுகளில் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் மாநிலத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 25% நிதி வேளாண்மைத்துறைக்கு ஒதுக்கப்படும்.

தமிழ்நாட்டின் 2-வது தலைநகரமாக திருச்சி அறிவிக்கப்படும். ஏழைத் தொழிலாளர்களின் நலன் கருதி, ரூ.10க்கு சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், ஊறுகாய் உடன் நிறைவான மதிய உணவு வழங்கப்படும். ஞாயிறு அன்று ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்க ‘மக்கள் உணவுத் திட்டம்’ தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட 274 வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Related Stories: