சென்னை: தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, லோக் போல் சார்பில் நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பு படி 40.1% வாக்கு சதவீதம் பெற்று மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கிறது என்று தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் – சசிகலா கூட்டணி என்று 5 முனை போட்டி நிலவி வருகிறது. இதில் நேரடி போட்டி என்பது திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே தான் உள்ளது. குறிப்பாக, வலுவான கூட்டணியை அமைத்துள்ள திமுக தீவிர பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அதேபோன்று அதிமுகவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதேபோன்று தனது பலத்தை நிரூபிக்க நாம் தமிழர் கட்சியின் சீமான், அரசியலுக்கு புதிதாக வருகை தந்துள்ள விஜய் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் இந்த கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்களின் கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், லோக்போல் (Lok Poll) சார்பில் தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது.
ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 500 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 1,17,000 பேரிடம் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தற்போது அதன் முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த ஆய்வில், அடுக்கு சீரற்ற மாதிரி முறை கையாளப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 4 மண்டலங்களாக பிரித்து ஆய்வு நடத்தியுள்ளது. இதில் வடக்கு மண்டலம், டெல்டா மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம்(ெகாங்கு மண்டலம்) என பிரித்து மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.
இதில் கொங்கு மண்டலம் மட்டும் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக அதிக தொகுதிகளை வெல்லும் என்று லோக் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொங்கு மண்டலத்தில் இந்த முறை திமுக கூட்டணி 44 முதல் 46 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வெறும் 9 – 10 தொகுதிகளிலும், தவெக 2 – 3 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலத்தை எடுத்து கொண்டால் தருமபுரி, திண்டுக்கல், கோவை, கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. இதில் சேலம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமாகும். கடந்த முறை கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் அதிமுக 9 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வென்ற நிலையில் தற்போது கொங்கு மண்டலம் முழுமையாகவே 9 முதல் 10 தொகுதிகளிலும் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவிற்கு பேரதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
கொங்கு மண்டலத்தில் திமுக பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ள நிலையில் அதற்கு கைமேல் பலன் கிடைக்கும் என்று இந்த கருத்து கணிப்பு முடிவு உறுதி செய்துள்ளது. அதேபோல் வடக்கு மண்டலம் என்பது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும். இந்த வடக்கு மண்டலத்தில் திமுக 53 முதல் 56 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டலத்தில் அதிமுக 11 முதல் 12 தொகுதிகளிலும், விஜயின் தவெக 2 முதல் 3 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலிலேயே அதிமுகவை விட திமுக தான் அதிக தொகுதிகளை வென்றது. தற்போதும் அதேபோல் திமுக தனது செல்வாக்கை தக்க வைக்கிறது. மேலும் தமிழகத்தில் மத்திய மண்டலம் அல்லது டெல்டா மண்டலம் என, அரியலூர் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அழைக்கப்படுகிறது.
இந்த மண்டலத்தில் டெல்டாவை எடுத்து கொண்டால் திமுக கூட்டணி 39 – 40 தொகுதிளிலும், அதிமுக கூட்டணி 9 -10 தொகுதிகளிலும், தவெக 2-3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தை எடுத்து கொண்டால் கன்னியாகுமரி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில் திமுக கூட்டணி 45 – 47 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 9- 10 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும் வெல்லும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு அடிப்படையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும். திமுக கூட்டணி மொத்தமாக திமுக கூட்டணி 40.1% வாக்கு சதவீதத்துடன் 181முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 29% வாக்குகளைப் பெற்று 38 முதல் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 23.9% வாக்குகளைப் பெற்று 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 4.9% வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடங்களைக் கூட கைப்பற்றாது என்றும், மற்றவர்கள் 2.1% வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
* முதல்வர் முகமாக மு.க.ஸ்டாலின் முதலிடம்
லோக் போல் நடத்திய கருத்து கணிப்பின் படி, மக்களின் விருப்பத்திற்குரிய முதல்வர் முகமாக மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். 41% மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு 24.1% மக்களும், விஜய்க்கு 27.1% மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் அல்லாத பிறருக்கு 7.8% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
