காவல் நிலையத்தில் எஸ்ஐ கைத்துப்பாக்கி வெடித்து சீலிங்கில் குண்டு பாய்ந்தது: ஏஎஸ்பி விசாரணை: வேலூரில் பரபரப்பு

வேலூர், ஜன.7: வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் எஸ்ஐ கைத்துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரணை நடத்தினார். வேலூர் வடக்கு காவல் நிலைய எஸ்ஐ ஜெகதீசன். இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் தனது குழுவினருடன் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து நேற்று அதிகாலையில் காவல் நிலையம் வந்து அமர்ந்தபோது, அவர் வைத்திருந்த 9 எம்எம் கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துள்ளார். அப்போது, டிரிக்கரில் தவறுதலாக கைப்பட்டதால் அது வெடித்து ஒரு குண்டு வெளியேறி, கட்டிடத்தின் மேற்புற சீலிங்கில் பட்டு சிதறியது.

திடீரென காவல் நிலையத்தில் எழுந்த துப்பாக்கிச் சுடும் சத்தம் சக காவலர்களை அதிர்ச்சியடைய செய்தது. உடனடியாக அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, எந்த பாதிப்புமில்லை என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் வேலூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: