கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலி; 7 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததே முக்கிய காரணம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி: கரூரில் நடந்த பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என குமரியில் பா.ஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார். பின்னர் அவர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ள நிலையில், தமிழக அரசு அளிக்கும் அறிக்கையில் என்ன குறிப்பிட்டுள்ளது என்பது தெரியவில்லை.

விஜய் பிரசாரத்துக்கு 7 மணி நேரம் கழித்து காலதாமதமாக வந்ததும், கூடியிருந்தவர்களுக்கு குடிநீர், உணவு வழங்காததுமே கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பெரும் துயர சம்பவம் நடந்த நிலையில் அங்கிருந்து மக்களை சந்தித்து ஏற்பாடுகளை கவனிக்காமல் விஜய் புறப்பட்டு சென்றது தலைவனுக்கான தரம் இல்லை. எதிர்காலத்தில் விஜய் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அவர் சரியான நேரத்தில் செல்வதோடு, அங்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது கட்சி தொடங்கி உள்ள அவர் இதைக்கூட செய்யவில்லை என்றால் நாளை ஆட்சிக்கு வந்து என்ன செய்ய போகிறார்? விஜய்யின் இது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த துயர சம்பவம் விஜய்யின் எதிர்கால அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: