மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4ம் கட்டமாக நேற்று முதல் செப். 4ம் தேதி வரை மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். மாலை 5.50 மணிக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பேசினார். தொடர்ந்து திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பஸ்சின் மீது நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதுவரை நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களில் முக்கிய கூட்டணி கட்சியினரை தன்னுடன் நிற்க வைத்து பேசுவதை வழக்கமாக ெகாண்டிருந்த எடப்பாடி, நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த கூட்டத்தில், அதிமுக மாவட்டச செயலாளரான ராஜன்செல்லப்பாவை மட்டும் நிற்க வைத்திருந்தார். பாஜவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் பலர் மதுரையில் இருந்தும் அவர்கள் யாரையும் பிரசார வாகனத்தில் ஏற்றவில்லை.
குறிப்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.னிவாசன், மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஆகியோர் பிரசார வாகனத்தில் ஏறமுயன்றனர். ஆனால், அதிமுக ஐடி விங்க் நிர்வாகி ராஜ்சத்யன், மேலே இடமில்லை எனக்கூறி, அவர்களை ஏறவிடாமல் தடுத்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பாஜவினர் அங்கு சிறிது நேரம் நின்றிருந்தனர். ஆனால், பிரசார வேனுக்கு தாங்கள் அழைக்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்து, எடப்பாடி பேசி முடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
