3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்குகளை முதலில் உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கட்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:நாடு முழுவதும் முன்னதாக இருந்த இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா 2023 ஆகிய மூன்று புதிய சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பெடரேஷன் ஆப் பார் அசோசியேசன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மேற்கண்ட மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது .

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘இந்த மூன்று சட்டங்களின் பெயர்களை கூட தமிழ்நாட்டில் இருக்கும் வழக்கறிஞர்கள் பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. மேலும் இந்த புதிய சட்டம் முந்தைய முக்கியமான குற்றவியல் நடைமுறை சட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பங்கள் தான் ஏற்படும்.

அதனால் உச்ச நீதிமன்றமே இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முதலில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி உத்தரவுகளை பிறப்பிக்கட்டும். அதற்கு பிறகு நாங்கள் விசாரிக்கிறோம். மேலும் உயர்நீதிமன்றங்கள் இது தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதியை தான் கேட்டுக் கொள்வதாகவும் நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தார்.

Related Stories: