குஜராத்தில் 2வது நாள் பயணம் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்போம்: மாருதி சுசுகியின் முதல் மின்வாகனத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்: இந்திய பொருட்களுக்கு இன்று முதல் கூடுதலாக 50 சதவீதம் அமெரிக்கா வரிவிதிக்கிறது. இந்த நிலையில் நேற்று இரண்டாம் நாளாக குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் தொழிற்சாலையிலிருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ விட்டாராவை ஏற்றுமதி செய்வதை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவோம். இந்தியாவில் தயாரிக்கும் திட்டங்களுக்கு தீவிரமான ஆதரவை வழங்குவோம். இது நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும். எனவே சுதேசி அனைவரின் வாழ்க்கை மந்திரமாக இருக்க வேண்டும். யார் முதலீடு செய்தாலும், உற்பத்தி நம் நாட்டில் நடைபெற வேண்டும். எனது அரசாங்கத்தின் இந்தியாவில் தயாரிப்போம் என்கிற முயற்சி உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் உலகம் முழுவதும் இயங்க உள்ளது.

சுதேசிக்கான எனது வரையறை மிகவும் எளிமையானது. யாருடைய பணம் முதலீடு செய்யப்படுகிறது என்பது முக்கியமல்ல, அது டாலர்கள், பவுண்டுகள், நாணயம், கருப்பு அல்லது வெள்ளை நிறமா என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. உற்பத்தியில், வியர்வை என் நாட்டு மக்களுக்கு சொந்தமானது என்பதுதான் முக்கியம். பணம் வேறொருவருடையதாக இருக்கலாம், ஆனால் வியர்வை நம்முடையது. 2047 ஆம் ஆண்டுக்குள் உங்கள் எதிர்கால சந்ததியினர் உங்கள் தியாகங்களில் பெருமை கொள்ளும், உங்கள் பங்களிப்புகளில் பெருமை கொள்ளும் ஒரு பாரதத்தை நாங்கள் உருவாக்குவோம்.

அந்த வகையில், மாருதி சுசுகியும் ஒரு சுதேசி நிறுவனம் தான். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு இன்று ஒரு சிறந்த நாள். ஏனெனில் நாட்டில் தயாரிக்கப்படும் மின் வாகனங்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும். மேக் இன் இந்தியா முயற்சி உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி முதலீடு
சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன், இந்தியாவில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்த அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யும் என்று அதன் பிரதிநிதி இயக்குநரும் தலைவருமான தோஷிஹிரோ சுசுகி தெரிவித்தார். மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறுகையில்,’ ஆண்டுக்கு 40 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்வதற்காக எங்கள் அனைத்து உள்கட்டமைப்பையும் விரிவுபடுத்த உள்ளோம்.

வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு (செப்டம்பர் 4 அன்று) நாங்கள் இன்னும் எங்கள் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்போம். சுசுகி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ விட்டாரா கார் ஏற்றுமதி சந்தைகளுக்கானது.

இந்தியாவில் உள்நாட்டு சந்தையில் இந்த காரை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த கார் பிபாவாவ் துறைமுகத்திலிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும்’ என்றார்.

Related Stories: