பொதுக்குழுவில் சமர்ப்பித்த 16 குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாளுக்குள் விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ்: பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பியது

 

திண்டிவனம்: அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க 16 குற்றச்சாட்டுகளுடன் ஒழுங்கு நடவடிக்கை குழு பாமக நிறுவனர் ராமதாசிடம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அவரிடம் 7 நாளுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டானூர் தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாசின் மூத்த மகள் காந்திமதி உள்ளிட்ட 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக கடந்த 30-05-2025 முதல் செயல்படுவதை அங்கீகரித்தும், சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு முடிவுகளை எடுக்கவும், தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் முழு அதிகாரத்தையும் ராமதாசுக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமகவில் 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை அளித்தது. ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் அன்புமணி ஏற்படுத்தியுள்ளார். ராமதாஸ் இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது. அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது உள்பட 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

அந்த அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாசிடம் சமர்ப்பித்த நிலையில் நேற்று அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், ஏழு நாட்களுக்குள் அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாமக செயல் தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணியை நீக்கம் செய்யவும் ராமதாஸ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விழுப்புரத்தில் கடந்த 20ம்தேதி நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்), வெங்கடேஸ்வரன் (தர்மபுரி) மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோருக்கு கட்சி நன்னடத்தை விதிகளை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர்கள் இதுவரை நேரிலோ, கடிதம் மூலமாகவோ விளக்கம் எதுவும் அளிக்காத நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தற்போது செயல் தலைவர் அன்புமணிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்காவிடில் அவர் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயலாம் என்ற பரபரப்பு பாமக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

* இன்று ஆலோசனை

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் இன்று (19ம்தேதி) தைலாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருள் எம்எல்ஏ உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் ராமதாசை சந்தித்து முக்கிய ஆலாசனை நடத்துகின்றனர். இதில் அன்புமணி மீதான புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Related Stories: