திண்டிவனம்: பாமக நிறுவனராகவும், தலைவராகவும் இனி ராமதாசே தொடர்ந்து செயல்படுவார் என பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை ெசய்துள்ளது, பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இருவரும் மாறி, மாறி கட்சி நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதுமாக இருந்து வந்தனர். தற்போது கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் இருவரும் இறங்கிவிட்டனர்.
கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி தனது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்துக்கொண்டார். இந்தப் பொதுக்குழுவுக்கு ராமதாசுக்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும், பொதுக்குழு மேடையில் அவருக்காக ஒரு நாற்காலி மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். கட்சி நிறுவனரான எனது அனுமதியின்றி நடந்த இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ராமதாஸ் அறிவித்தார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கும் புகார் அளித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பட்டானூர் சங்கமித்ரா அரங்கில் பாமக மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று காலை ராமதாஸ் தலைமையில் தொடங்கியது. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் தீரன், பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, அருள் எம்எல்ஏ, ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, அவரது மகன் முகுந்தன் பரசுராமன், மகளிர் அணி சுஜாதா கருணாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் எந்த இடத்திலும் அன்புமணி பெயரோ, புகைப்படமோ இடம் பெறவில்லை. ராமதாசின் படம் மட்டுமே பிரதானமாக இடம் பெற்றது. நிர்வாகிகள் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, அய்யா முடிவே இறுதியானது என்ற பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பாமக நிறுவனராகவும், தலைவராகவும் இனி ராமதாசே தொடர்ந்து செயல்படுவார். வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமக அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றிக் கூட்டணியை உருவாக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. தேர்தல் சம்பந்தப்பட்ட பேச்சுக்களோ, கூட்டணி வைப்பதற்கான பேச்சுக்களோ நடத்தும் அதிகாரம், சட்ட விதிகளின்படி இந்தப் பொதுக்குழு வாயிலாக திருத்தப்பட்டு நிறுவனருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குகிறது.
வேறு எந்த பொறுப்பாளர்களும் கூட்டணிப் பேச்சு வார்த்தை செய்ய இயலாது. நிறுவனர் மட்டுமே அதனை செய்ய இயலும் என்ற புதிய விதி(35) உருவாக்கப்படுகிறது. வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடை ராமதாஸ் தலைமையில் மீண்டும் போராடி உறுதியாக பெறுவோம் என்பது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொதுக்குழுவில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கும்படி 16 குற்றச்சாட்டுகளுடன் ஒழுங்கு நடவடிக்கை குழு ராமதாசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதனை கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வாசித்தார்.
அதில், 2024ம் ஆண்டு புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் மைக்கை தூக்கிப்போட்டு, பாமக நிறுவனருக்கு எதிராக பேசியது. பனையூரில் கட்சி அலுவலகம் திறந்துள்ளேன், அங்கே வாருங்கள் என கைப்பேசி எண் கொடுத்தது போன்ற செயல்கள் கட்சியை அன்றே பிளவுபடுத்தவும், குழப்பத்தை ஏற்படுத்தும் தலைமைக்கு கட்டுப்படாத செயல்களே என ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது.பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அன்புமணி, கைப்பேசியில் தொடர்பு கொண்டு, 100 மாவட்ட செயலாளர்களை தடுத்து நிறுத்தியது கட்சியை திட்டமிட்டு பிளவுபடுத்த நினைத்த கட்சி விரோத நடவடிக்கை.
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசின் இருக்கைக்கு அருகில் ஒட்டு கேட்பு கருவியை வைத்தது. பொதுக்குழு என்ற பெயரில் ஒரு தனி நாற்காலி போட்டு, துண்டு அணிவித்து அந்த கூட்டத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத சில விஷமிகளை துண்டிவிட்டு, அந்த சிலரும் கடவுள் சிலை முன்பு நின்று ராமதாசுக்கு, நல்ல புத்தியை கொடு என்பது யாரும் ஏற்காத ஒழுங்கீனமான செயலாக கருதப்படுகிறது. எவ்வித அனுமதி பெறாமல் தன்னிச்சையாக உரிமை மீட்க, தலைவரை காக்க எனும் பெயரில் நடைபயணத்தை மேற்கொள்வது கபட நாடகமாகவே கருதுகிறது.
பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றியது, ராமதாஸ் நியமனத்தை செல்லாதது என அறிவித்தது. ஜி.கே,மணி, சேலம் அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கேலி, கிண்டலாக பேசி சிரித்தது என 16 வகையான புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பரீசிலித்து 7 நாட்களுக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை ராமதாஸ் அறிவிப்பார் என தெரிகிறது.
* தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்பேன்: ராமதாஸ் உறுதி
பொதுக்குழுவில் ராமதாஸ் பேசுகையில், பொதுக்குழு தீர்மானங்கள் ஒரு சமுதாயதுக்கானது அல்ல, 8 கோடி தமிழ் மக்களின் நலனுக்கானது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கானது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோருவது அனைவருக்காகவும்தான். அதனாலே சொல்கிறேன். எல்லா சமுதாயமும் என் பின்னால் வாருங்கள், நான் காட்டுகிற வழியில் சென்றால் எல்லாமும் கிடைக்கும். பொதுக்குழு உறுப்பினர்கள் நாம் எந்த கூட்டணியோடு, என ஆவலோடு எதிர்பார்க்கிறீர்கள். இயற்கையான கூட்டணி எங்கே கிடைக்கும். வெற்றிக்கூட்டணி எங்கே கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறீர்கள்.
கூட்டணி வைப்பதற்கான முழு அதிகாரத்தை எனக்கு வழங்கியுள்ளீர்கள். நிச்சயமாக உங்களில் உள்ளங்களிலே, மனங்களிலே என்ன நினைக்கிறீர்கள் என்பதை நானறிவேன். தொண்டர்கள் விரும்பியவாறு நல்ல கூட்டணியை ஏற்படுத்துவோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்பதெல்லாம், நீங்கள் நினைத்தால் ஒருவாரத்திலே 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது உங்களால் முடியும், பல மாநிலங்களில் செய்திருக்கிறார்கள். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக போராடுவோம். பொதுக்குழுவின் 37 தீர்மானங்களும் தமிழ்நாட்டின் நலனுக்கானது. இதனை தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும், என்றார்.
* அன்புமணி இடத்தில் காந்திமதி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே பட்டானூரில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் அறிவித்தார். அப்போது ராமதாசுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அன்புமணி மேடையிலேயே ைமக்கை தூக்கிபோட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் பாமக இரண்டாக பிளவு பட்டது. கட்சி பிளவு பட்ட இடத்திலிருந்தே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ராமதாஸ், அன்புமணி அமர்ந்திருந்த அதே இடத்தில் தனது மூத்த மகளும் முகுந்தனின் தாயுமான காந்திமதியை அமர வைத்திருந்தார்.
* பொதுக்குழு நிகழ்வுகள் வீடியோவில் பதிவு
பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அதில் பெயர், முகவரி போன்ற விபரங்கள் பெறப்பட்டு புகைப்படம் ஒட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவதற்காக, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
