தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.11.63 லட்சம்

மேட்டுப்பாளையம், ஏப்.4: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. அதுமட்டுமல்லாமல் மாதங்களில் வரும் அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நாட்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும். சாதாரண நாட்களிலும் பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இக்கோவிலுக்கு கோவை,திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுச்செல்வது வழக்கம்.

இந்தக்கோவிலில் பக்தர்கள் அம்மனை வழிபட் கோவில் நிர்வாகம் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 20 உண்டியல்களில் தங்களது நேர்த்திக்கடனை காணிக்கையாக செலுத்துவதும் வழக்கம். இந்த உண்டியல்கள் மாதந்தோறும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியானது பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் உதவி ஆணையர் விஜயலட்சுமி மேற்பார்வையில் வன பத்ரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் உதவி ஆணையரும்,செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி,ஆய்வாளர் தமயந்தி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது நேற்று நடைபெற்றது.

இதில் கோவில் பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.காணிக்கை எண்ணும் பணியானது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. முடிவில் ரொக்கப்பணமாக 11,63,032 ரூபாயும்,53 கிராம் தங்கமும்,60 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். இவ்வாறு கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.11.63 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: