கோவை மாவட்டத்தில் வடிகால் பாதை, புதர்களை சீரமைத்து 600 குட்டைகளில் நீர் தேக்க திட்டம்

கோவை, ஜூன் 9: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை) சுமார் 1.60 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர். மாவட்ட அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் ஊரக வேலை பணிகள் நடக்கிறது. ஆண்களை காட்டிலும் பெண்கள் இந்த திட்டத்தில் அதிகமாக பயன்பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டாக ஊரக வேலை திட்டத்தில் கூலி உயர்வு போதுமானதாக இல்லை என்ற புகார் எழுந்தது. தற்போது கடந்த ஆண்டில் இருந்து ஊரக வேலை திட்டத்தில் தினக்கூலி 300 ரூபாய் வரை கிடைக்கிறது. ஆண், பெண் பாகுபாடின்றி இந்த கூலி வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் போதுமான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பருவ மழை துவங்கும் நிலையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 250 வகையான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ரோட்டோரம் மரக்கன்று நடுதல், கசிவு நீர் குட்டைகள் சீரமைப்பு, தடுப்பணைகள், மீள் உறிஞ்சு குழிகள் அமைத்தல், நீர் பாதை சீரமைப்பு, நீர் தேக்கம் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், பண்ணை குட்டை உருவாக்குதல், கல் வரப்பு, அகழிகள், நீர் அகழிகள் போன்ற பணிகளுக்கு அதிகளவு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் 798 நீர் குட்டைகள் இருக்கிறது. இவற்றில் 85 சதவீத குட்டைகள் வறட்சியில் இருப்பதாக தெரிகிறது. சுமார் 600 குட்டைகளில் மழை பெய்தால் இதில் முழு அளவில் நீர் தேக்கும் அளவிற்கு குட்டைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

வடிகால் பாதை சீரமைப்பு, புதர்கள் அகற்றம், தாழ்வான பகுதியில் உள்ள அடைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் நடக்கிறது. கிராம பகுதிகளில் வெள்ள அபாய பகுதிகள், நீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி முகமையினர் கூறுகையில்,‘‘கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. கோடை மழை கணிசமாக பெய்தது. பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமங்களில் மழை நீர் கட்டமைப்பு உருவாக்க தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான முன் ஏற்பாடுகள் நடக்கிறது.

வேளாண் நிலங்களை சீரமைக்க ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் உதவி செய்யப்பட்டு வருகிறது. ஓடைகள், நீர் வடிகால், மழை நீர் வடிகால் பகுதிகளை கண்டறிந்து புதர்களை அகற்றி வருகிறோம். இயந்திரங்களை தவிர்த்து ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. மின்னணு வருகை பதிவேடு முறை முழு அளவில் அமலாக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post கோவை மாவட்டத்தில் வடிகால் பாதை, புதர்களை சீரமைத்து 600 குட்டைகளில் நீர் தேக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: