99வது பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

சென்னை: கலைஞரின் 99வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் தனி பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்திய திருநாடே வியந்து போற்றிய முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கு இன்று (3ம் தேதி) காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். நிகழ்வில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கேற்ப, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பரந்து விரிந்து வாழ்கின்ற தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவர், தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சி பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையை பதித்தவர். 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திமுக எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத ஜனநாயக தலைவராகவும், அண்ணாவின் அன்பு தம்பியாகவும் திகழ்ந்தவர்.அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தலைப்பு செய்தியாக இருந்தவர். 5 முறை முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல சமூக நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தை தலைநிமிர செய்தவர். இந்தியாவிற்கே முன்னோடியாய் சமூகநீதி காத்து சமத்துவபுரம் அமைத்த சமுதாய காவலர் கலைஞர். முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், கலைஞரின் உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பினை சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதனை செயல்படுத்திடும் வகையில், கடந்த 28ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவால் கலைஞரின் உருவ சிலை திறப்பு விழா சிறப்போடும் நடந்தது. ‘ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில்’ என்கிற திருவள்ளுவரின் வாக்கினிற்கேற்ப, தாய் தமிழ் மண்ணிற்கும், தமிழ்மக்களின் நலனிற்கும் தன்னையே அர்ப்பணித்து இறவா புகழினை எய்தியுள்ள கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா அரசின் சார்பில் சீரோடும் வெகு சிறப்போடும் கொண்டாடப்படுகிறது. …

The post 99வது பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: