வீட்டு கழிவுகளை கொட்டுவதால் பாதாள சாக்கடைகளில் 85% அடைப்பு: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் தமிழக அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் பாதாள சாக்கடை அமைப்பில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் கழிவுநீர் அமைப்பு மிகவும் பழமையானது. எனவே தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு போன்ற பகுதிகளில் தற்போதுள்ள சாக்கடை அமைப்பை மேம்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் பாதாள சாக்கடை திட்டங்களை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்றொரு புறம் பாதாள சாக்கடைகளில் எந்த அளவிற்கு குப்பை கழிவுகள் போட்டு அடைப்புகளை ஏற்படுத்த முடியுயோ அந்த வகைகளில் மக்கள் பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 85 சதவீதம் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக பாதாள சாக்கடையில் திடக் கழிவுகள், மக்காத பொருட்கள், சாலையோரங்களில் உள்ள குப்பை உள்ளிட்டவை மூலமாக அதிகப்படியாக அடைப்புகள் ஆங்காங்கே ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரிய மேலாண்மை நடத்தி ஆய்வில், சாக்கடை குழாய்களில் இருக்கக்கூடாத பல பொருட்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், மதுபாட்டில்கள், குப்பை, இறைச்சி மற்றும் மீன் முட்கள் போன்ற பொருட்களால் பாதாள சாக்கடை கால்வாய்கள் அடிக்கடி அடைக்கப்படுவது தெரியவந்துள்ளது. இவ்வாறு குவிந்துள்ள கழிவுகளால், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடவும், நகரின் 85 சதவீத கழிவுநீர் அடைப்புகளுக்கும் காரணமாக உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட மண்டலங்களில் இந்த பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை அதிகாரி கூறியதாவது: சென்னையை பொறுத்தவரை பாதாள சாக்கடைகளின் வழித்தடங்களில் ஏற்படும் தேக்கங்கள் குறித்து முழு கவனம் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், மதுபாட்டில்கள், துணிகள், குப்பை கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு மற்றும் அண்ணாநகர் போன்ற மண்டலங்களில் அதிகப்படியாக தேக்கம் அடையக்கூடிய பொருட்களாக விளங்குகின்றன.

இதேபோல், காசிமேடு பகுதிகளில் மீன்பிடி தளங்கள் அதிகமாக உள்ள காரணத்தினால் அந்த பகுதிக்கு உட்பட்ட மண்டலான ராயபுரம், தண்டையார்ப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் போன்ற பாதாள சாக்கடைகளில் அதிகப்படியான மீன் இறைச்சிகளின் கழிவுகள் கொடப்படுகின்றன. 85 சதவீதம் அளவிற்கு அடைப்புகள் காரணமாக ஏற்படும் அழுத்தத்தினால் கழிவுநீர் சாலைகளின் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது. இந்த அடைப்பு காரணமாக தான் சென்னையில் 4,500 கி.மீ வரை பாதாள சாக்கடைகள் திடக்கழிவுகள் நிறைவந்துள்ளன. குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை போன்ற பகுதிகளி இந்த பிரச்னைகளை ஏற்படுகின்றனர். ஏனெனில், இந்த இடங்களில் அதிகப்படியான குடியிருப்புகள், விடுதிகள் உள்ளதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதனை பொதுமக்களும் தவிர்க்கும் விதமாக பாதாள சாக்கடைகளிலோ அல்லது கழிப்பறைகளிலோ தேவையில்லாத குப்பையை கொட்டும்பட்சத்தில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு எட்டமுடியாது என சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தரப்பில் வீட்டிற்கு வீடு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் தங்களின் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

 

The post வீட்டு கழிவுகளை கொட்டுவதால் பாதாள சாக்கடைகளில் 85% அடைப்பு: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: