பிரதமர் மோடி நாளை வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு: நட்சத்திர ஓட்டல், லாட்ஜ்களில் விடிய விடிய சோதனை

சென்னை: விமான நிலைய கட்டிடம் திறப்பு, வந்தே பாரத் ரயில் இயக்கம், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதையடுத்து மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 22 ஆயிரம் போலீசார் மூலம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் விடிய விடிய போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடம் மற்றும் எம்ஜிஆர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவை திட்டம், மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சி மற்றும் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

இதனால் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வருகையின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும், பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், இணை கமிஷனர்கள் ரம்யா பாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில், கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ஆயுதப்படை, கமாண்டோ படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் என மொத்தம் 22 ஆயிரம் போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறும் விமான நிலையம், எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், ஹெலிகாப்டர் வந்து இறங்கும் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், மோடி செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தற்போது வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவித குற்றச்செயல்களும் நடக்காமல் இருக்க சென்னை மாநகரம் முழுவதும் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா என்று நேற்று இரவு முதல் விடிய விடிய போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நாளை சென்னையில் குறிப்பாக பிரதமர் மோடி வந்து செல்லும் பகுதியில் டிரோன்கள் பறக்க மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. அதையும் மீறி யாரேனும் டிரோன் பறக்க விட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் நிகழ்ச்சிகள் நடக்கும் விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், விவேகானந்தர் இல்லம், பல்லாவரம் கிரிக்கெட் மைதானம் ஆகிய பகுதியை ஆய்வு செய்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், பிரதமர் செல்லும் போது எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக இன்று பிற்பகல் பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர காவல்துறை இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி நாளை பகல் 1.35 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார். 2.50 மணிக்கு வாகனம் மூலம் சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள கட்டிட வளாகத்திற்கு வருகிறார். பிறகு 3 மணிக்கு புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

அதைதொடர்ந்து 3.20 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு 3.55 மணிக்கு வருகிறார். பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார். 4.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் ெதாடங்கி வைக்கிறார்.

பின்னர் சாலை மார்கமாக மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் மாலை 4.45 மணிக்கு கலந்து கொள்கிறார். அங்கு நிகழ்ச்சி முடிந்து 5.45 மணிக்கு சாலை மார்கமாக அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்கிறார். 6 மணிக்கு ஹெலிக்காப்டர் மூலம் 6.20 மணிக்கு விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்கமாக பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு செல்கிறார். நிகழ்ச்சி முடிந்த இரவு 7.35 மணிக்கு சாலை மார்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து கர்நாடகாவில் உள்ள மைசூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்.

அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்திற்கு பிரதமர் சாலை மார்க்கமாக செல்வதால், பிரதமர் கான்வாய் செல்லும் போது, யாரேனும் உள்ளே செல்லாதபடி சாலை இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post பிரதமர் மோடி நாளை வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு: நட்சத்திர ஓட்டல், லாட்ஜ்களில் விடிய விடிய சோதனை appeared first on Dinakaran.

Related Stories: