போகி புகை, கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை: போகிப் பண்டிகை புகைமூட்டம் மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளான மீனம்பாக்கம் கவுல் பஜார், பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து வீடுகளில் உள்ள பழைய கழிவு பொருட்கள், பிளாஸ்டிக், டயர்களை தெருக்களில் போட்டு தீயிட்டு கொளுத்தினர். இதனால் ஏற்பட்ட பெரும் புகை மூட்டம், அருகே உள்ள விமான நிலைய ஓடுபாதை மைதானத்தை சூழ்ந்தது. மேலும் நேற்று அதிகாலையில் வழக்கத்தை விட பனிப்பொழிவும் அதிகமாக இருந்ததால் விமான நிலைய ஓடுபாதையே தெரியாமல் மறைந்தது.

இதனால் சென்னையில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் நீண்ட நேரம் வானிலே வட்டமடித்தது சிங்கப்பூர், லண்டன், இலங்கை மற்றும் டெல்லியில் இருந்துவந்த 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. மேலும் மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 21 வருகை விமானங்கள், துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள், புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக காலை 9 மணி வரை சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஸ்பை ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னையில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

The post போகி புகை, கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: