1.3 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: 1.3 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் நடந்து வரும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது துறையின் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்று (14ம் தேதி) மட்டும் இங்கு 320 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த நிகழ்வு மிக சிறப்பாக நமக்கு முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இன்று (நேற்று) 11 மணி வரைக்கும் மொத்தம் 2 கோடியே 66 லட்சம் மின் நுகர்வோருடைய மின் எண்ணோடு சேர்த்து ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் முடிந்துள்ளன.  ஏறத்தாழ ஆன்லைனியில் 51 லட்சம் பேர் இணைத்துள்ளார்கள். பிரிவு அலுவலகங்களில் செயல்படும் ஆப்லைன் சேவையில் 52 லட்சம் பேர் இணைத்திருக்கிறார்கள். மொத்தம் 1 கோடியே 3 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் சேர்த்து ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. இந்த மாதம் இறுதி வரை அதற்கான காலங்கள் இருக்கின்றன. எனவே, இந்த மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் மிகச் சிறப்பாக மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொடங்குகிறபொழுது சில புதிய தேவைகளுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டிய சூழல் இருந்தது.  அந்த பணிகள் இப்பொழுது மேம்படுத்தப்பட்டு உடனுக்குடன் இரண்டு நிமிடம் ஒருவருக்கு, எந்த அளவில் நேரம் ஆகிறது,  எந்த எண்ணிற்கு ஓ.டி.பி வருகிறதோ அந்த கைபேசியை கையில் வைத்திருந்தால் சுலபமாக இணைத்துவிடலாம். சென்னையில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையான மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் முடியும். சென்னையைப் பொறுத்தவரை 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  வணிக வளாகங்கள், அதேபோல தலைமைச்செயலகத்தினுடைய இந்த பகுதிகள் உள்ளிட்ட 15 இடங்களில் நடக்கிறது. தேவைப்பட்டால் கூடுதலாக சிறப்பு முகாம் நடத்துவதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. இந்த சிறப்பு முகாம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை தவிர, மீதம் இருக்கக்கூடிய விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். விமர்சனம் செய்யக்கூடியவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக விமர்சனம் செய்யலாம்.  சரியான விமர்சனங்களை கவனத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மின் வாரியத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் ரூ.7 கோடி சாம்பல் மூலம் வருமானம் வந்தது.  தற்போது ரூ.13.71 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. வருமானம் இரட்டிப்பு ஆக்கப்பட்டிருக்கிறது.  ரூ.6,600 கோடி ஆர்.இ.சி.யில் வாங்கின கடனிற்கு 13% இருந்து 10 % வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு ரூ.84 கோடி அளவிற்கு வட்டி கட்டுவதிலிருந்து செலவு குறைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன கடந்த காலங்களில் செலவினங்கள் கூடுதலாக இருந்தது, அவற்றில் எவை எவைகளை சீரமைக்கலாம் என்று கவனத்தில் கொண்டுதான் மின் வாரியம் மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஆதார் இணைக்கும் பணி நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதைப் பொறுத்தவரை பொதுமக்களோ, வணிக நிறுவனங்களோ, தொழில்முனைவோர்களோ அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு கூறினார்….

The post 1.3 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: