முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்

அரியலூர், மார்ச் 20: தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை அரியலூர் கலெக்டர் ரத்னாவிடம் வக்கீல் செல்வகுமார் வழங்கினார். அரியலூர் மாவட்டம் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடலாக இருந்ததும், இந்த கடலில் ஏற்பட்ட சுனாமி அல்லது கடலின் ஆழத்தில் இருந்து வெடித்து சிதறியதால் வெளியேறிய தீக்குழம்பு கடல் மற்றும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மீது படிந்து பூமிக்குள் புதையுண்டதால் அவை அனைத்தும் பாசில் படிமங்களாக உருமாறியுள்ளது என்று வரலாற்று ஆராய்ச்சியில் தெரியவருகிறது. இவ்வாறான கடலில் வசித்த ஸ்டார்பிஷ், கடல் ஆமை, விலங்கினங்களின் பற்கள், மரத்தாவரங்களின் இலைகள், மரத்துண்டுகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாசில் படிமங்களை இப்பகுதியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார் என்பவர் தனது ஆராய்ச்சி மேல்படிப்புக்காக செந்துறை அடுத்த துளார் பகுதி சுண்ணாம்புகல் சுரங்கப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் சேகரித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் தான் சேகரித்த அனைத்து பாசில் படிமங்களையும் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரத்னாவிடம் செல்வகுமார் ஒப்படைத்தார். அப்போது பாசில் படிமங்களின் வகைகள் மற்றும் தொன்மை குறித்து கலெக்டர் ரத்னா, எஸ்பி சீனிவாசன் ஆகியோர் கேட்டறிந்தனர். பின்னர் அரசிடம் பாசில் படிமங்களை ஒப்படைத்ததுக்கு செல்வகுமாரை பாராட்டி சால்வை அணிவித்தனர்.இதையடுத்து அனைத்து பாசில்படிமங்களையும் வகைப்படுத்தி அவற்றை பாதுகாப்பாக அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் உள்ள பாசில் புதைபடிவ பூங்காவில் வைக்க கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். மேலும் பாசில் பூங்காவில் பாதுகாப்பாக வைத்து அவற்றை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் கலைவாணன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: