தேசிய கூடைபந்து போட்டி ேகாவையில் 27ம் தேதி துவக்கம்

கோவை,மே 25: ஆண்களுக்கான நாச்சிமுத்துகவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் வரும் 27ம் தேதி தொடங்குகிறது கடந்த 53 ஆண்டுகளாக ஆண்களுக்கான நாச்சிமுத்துகவுண்டர் கோப்பை மற்றும் 17 ஆண்டுகளாக பெண்களுக்கான சி.ஆர்.ஐ  பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டிற்கான போட்டிகள் கோவையில் வரும் 27ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளன. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவையில் நேற்று நடைபெற்றது.

அப்போது கோவை மாவட்ட கூடைப்பந்து கழக துணை தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

ஆண்களுக்கான நாச்சிமுத்துகவுண்டர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க இந்திய அளவில் முன்னணியில் உள்ள 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை வருமான வரி அணி, டெல்லி இந்தியன் ரயில்வே அணி, டெல்லி இந்திய ராணுவ அணி, கர்நாடகா பாங்க் ஆப் பரோடா அணிகள் ‘ஏ‘ பிரிவிலும், லோனாவாலா இந்திய கப்பல்படை அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, டெல்லி இந்திய விமானப்படை அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய அணிகள் ‘பி‘ பிரிவிலும் விளையாட உள்ளன.

இதே போல் பெண்கள் பிரிவிலும் அகில இந்திய அளவில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழல்கோப்பையும், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. மேலும், தேர்வு செய்யப்படும் அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது வழங்கப்பட உள்ளது.

 பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழல் கோப்பையும், இரண்டாவது பரிசு பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பையும், மூன்று மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட உள்ளது.

இப்போட்டிகள் கோவை வ.உ.சி பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் மே 27 முதல் ஜூன் 1ம் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளன.இவ்வாறு பழனிச்சாமி கூறினார்.

Related Stories: