சந்திரகிரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 5 வாக்குச்சாவடி மைய பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு கலெக்டர் தகவல்

சித்தூர், மே 17: சந்திரகிரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 5 வாக்குச்சாவடி மைய பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரத்யும்னா தெரிவித்தார். சித்தூரில் கலெக்டர் பிரத்யும்னா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட என்ஆர் கம்மபள்ளி, புலி வருத்தி வாரிபள்ளி, கொத்த கண்டிகை, கம்ப பள்ளி, வெங்கடாபுரம் ஆகிய 5 வாக்குச்சாவடி மையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு 3899 வாக்காளர்கள் உள்ளனர். மறுவாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிய கூடாது. மேலும் 5 வாக்குச்சாவடி மையத்துக்கு 20 இவிஎம் இயந்திரங்கள் அனுப்பப்பட உள்ளது. தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் எந்தவிதமான பிரச்னைகளும் இன்றி தேர்தல் நடத்த ஒத்துழைக்க வேண்டும். இதேபோல் 23ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு காலை 6 மணிக்குள் செல்ல வேண்டும்.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வெள்ளை நிற அனுமதி அட்டையும், ஏஜென்டுகளுக்கு பச்சை நிற அட்டையும் வழங்கப்பட உள்ளது. ஏஜென்டுகள் இங்க் பேனா எடுத்துவரக்கூடாது. வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரியை தவிர யாருக்கும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் அருகே காருக்கு கூட அனுமதி கிடையாது. இதற்காக வாக்கு எண்ணும் மையத்தின் அருகே பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையன்று வேட்பாளர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு 7.30 தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: