கோவில்பட்டியில் அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் தேர்தல் பிரசார வாகனங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை டி.எஸ்.பி. தகவல்

கோவில்பட்டி, மார்ச் 14: தேர்தல் பிரசாரத்தின் போது வாகனங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் நடந்த அனைத்து அரசியல் கட்சியினர் கலந்தாய்வு கூட்டத்தில் டி.எஸ்.பி.ஜெபராஜ் தெரிவித்தார்.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் எஸ்.பி.முரளிராம்பா உத்தரவுப்படி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமை வகித்தார். மேற்கு, கிழக்கு இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், கழுகுமலை, கயத்தாறு இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, ஆவுடையப்பன் மற்றும் திமுக, அதிமுக, பாஜ, பாமக, விடுதலை சிறுத்தைகள், அமமுக, தாமக, மதிமுக, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் டிஎஸ்பி ஜெபராஜ் பேசியதாவது: கடந்த 10ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்து விட்டது. எனவே அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போது வாகனங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை பொதுசுவர் மற்றும் தனியார் சுவர்களில் வரைய கூடாது. ஊரக பகுதிகளில் தேர்தல் அலுவலரிடம் முறையான அனுமதி பெற்று தனியார் சுவர்களில் மட்டும் தேர்தல் சின்னங்களை வரைந்து கொள்ளலாம். பொதுஇடங்களில் உள்ள கொடி, கொடிக்கம்பம், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் கொடி பீடத்தில் உள்ள சமுதாய மற்றும் அரசியல் தலைவர்களின் உருவபடங்களை 48 மணி நேரத்திலும், தனியார் இடங்களில் உள்ளவற்றை 72 மணி நேரத்திலும் அகற்ற வேண்டும்.  காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வழித்தடங்களில் தான் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும். பொதுகூட்டம், பிரசாரத்திற்கு உரிய முன் அனுமதி பெற்ற பின்னர் தான் நடத்த வேண்டும்.  சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தினால் ஆன பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுக்க கூடாது.  முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்களையோ, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணமோ எடுத்து செல்லக்கூடாது. எனவே அனைத்து கட்சி பிரமுகர்களும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: