வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 39 குழுக்கள் 13 இடங்களில் வாகன தணிக்கை தொடங்கியது

வேலூர், மார்ச் 12: வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை 24 மணி நேரமும் அமல்படுத்தவும், கண்காணிக்கவும் 39 பறக்கும் படைக்குழுக்களும், 39 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தகுதி நீக்க எம்எல்ஏக்களால் காலியானதாக அறிவிக்கப்பட்ட சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியான நேற்று முன்தினம் மாலை 5 மணி முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க 39 பறக்கும் படைகளும், 39 நிலை கண்காணிப்புக்குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், இதற்காக வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை கண்காாணித்து தடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அதோடு மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிர காண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக வேலூர் மாவட்டத்தை ஒட்டிய தமிழக-ஆந்திர எல்லைகளில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, பொன்னை, சேர்க்காடு, ஆர்.கே.பேட்டை, குடியாத்தம் தனகொண்டப்பல்லி, பேரணாம்பட்டு பத்தலப்பல்லி, பச்சூர் உட்பட 13 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன், பறக்கும் படை குழுக்களும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் தேர்தல் பணியில் 16 ஆயிரத்து 949 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 473 வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட 362 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன், கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: