வனத்தில் விலங்குகளின் தாகம் தீர்க்க ரூ.2.7 கோடியில் நொய்யல் திட்டம்

கோவை, பிப்.14:   கோவை வன ேகாட்டத்தில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனசரகங்கள் உள்ளது. 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்துள்ளது. வன விலங்குகள் குடிநீர், உணவுக்காக வன எல்லை தாண்டி கிராமங்களும், விவசாய தோட்டத்திற்கும் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.

 வன விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையில் நொய்யல் என்ற திட்டம் துவங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 2.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, போளுவாம்பட்டி சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் 4 தடுப்பணைகள், 10 கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்படவுள்ளது. 13 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பிற்கு நீர் ஆதாரம் ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் நீர் தேக்க குழிகள் அமைக்கப்படும். இந்த குழிகளின் மூலமாக வன விலங்குகள் தங்களுக்கு தேவையான தண்ணீர் பெற முடியும்.

 இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘ கோடை காலத்தை முன்னிட்டு கோவை கோட்டத்தில் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட நீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு லாரிகள் மூலமாக தினமும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி விவசாய தோட்டங்களுக்கு செல்லாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வனப்பகுதி நீரோடைகளில் வரும் தண்ணீரை தடுத்து தேக்கி வைக்கும் வகையில் கடந்த காலங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டது. தற்போது நொய்யல் திட்டத்தில் தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், நீர் குழிகள் அமைக்கப்பட்டு விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வசதியை செய்து வருகிறோம்.

 கோவை வன கோட்டத்தில் 75 கி.மீ தூரத்திற்கு தீ தடுப்பு கோடு (பயர் லைன்) அமைக்கும் பணி நடக்கிறது. இதன் மூலமாக வனத்தில் தீ பிடித்தால், அதை மேலும் பரவாமல் தடுக்க முடியும், ’’ என்றார்.

மதுக்கரை வன நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனபகுதியில் உள்ள வனநீர் தேக்க தொட்டிகளில் வனவிலங்குகளின் தேவைக்காக தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

 கோவை வனக்கோட்டம் கோவை, போளூவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என 7 வனசரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது, வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. வனத்தில் மழை பொழிவு இல்லை. வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வனத்தில் மரங்கள், செடிகள் கருகியுள்ளன. வனப்பகுதியில் உள்ள ஆறு, நீரோடை, குளம், சிறு குட்டைகள், தடுப்பணைகளில் வறட்சி காரணமாக தண்ணீர் இல்லை. இதனால், வனவிலங்குகள் தண்ணீர் தேவைக்காக வனத்தில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வனத்துறை சார்பில் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 42 வன நீர்தேக்க தொட்டிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி, மதுக்கரை வனசரகத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 7 வன நீர்தேக்க தொட்டிகளில் லாரியின் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.  இது குறித்து மதுக்கரை ரேஞ்சர் செந்தில் கூறுகையில், “மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனப்பகுதியில் உள்ள 7 வனநீர் தேக்க தொட்டிகளில் லாரியின் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடக்கிறது. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டர் வரை பிடிக்கும் நீர் தேக்க தொட்டிகளில் வாரத்திற்கு இரண்டு முறை நீர் நிரப்பப்படுகிறது. இந்த வன நீர்தேக்க தொட்டிகள் சிறிய விலங்குகள் மற்றும் பெரிய விலங்குகள் குடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: