கோயில் நகரமான திருச்செந்தூர் தெருக்களில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பக்தர்கள் கடும் அவதி

திருச்செந்தூர், பிப். 14: அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். சிறப்பு வாய்ந்த கோயில் நகரமான திருச்செந்தூர், சமீபகாலமாக ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நோய் பரப்பும் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இங்குள்ள தெப்பக்குள தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உள்ளது. கடந்த 9ம் தேதி இதன் வழியாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது. இதேபோல் நேற்றும் இந்த பாதாள சாக்கடை மூடியில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடியது. தற்போது கோயிலில் மாசித்திருவிழா நடந்து வருவதால், நாகர்கோவிலில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்ள் இவ்வழியாகத்தான் கோயிலுக்கு செல்கின்றனர். இப்பாதையில் பாதாள சாக்கடை கழிவுநீரோடு செப்டிக் டேங்க் கழிவுகளும் கலந்து வருவதால் மூக்கை பிடித்துக் கொண்டு முகத்தை சுளித்தபடியே செல்கின்றனர். மேலும் பாதாள சாக்கடை நீர் தெருவில் தேங்கி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் பாதசாரிகள் மீது கழிவுநீரை வாரி இறைக்கின்றனர். இதனால் அவ்வப்போது சிறு சிறு தகராறுகளும் ஏற்படுகிறது. கழிவுநீர் வெளியேறும் பகுதியில் வீடுகள், மரக்கடை போன்றவைகளும் உள்ளன. இதுகுறித்து இப்பகுதி மாஜி கவுன்சிலர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கொடுத்தும், நேரில் தெரிவித்ததும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றுலா தலமான திருச்செந்தூரில் அடிக்கடி பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காதது பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இனியாவது போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றத்தை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதியினர் தெரிவித்து உள்ளனர்.

இறைவனை ேதடி

தென்பொதிகை மலையில் அகஸ்தியர் வழிபட்ட குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பிருகு மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். அப்போது பிரகஸ்பதி வம்சத்தில் வந்த சுருசி என்பவன் நாடு முழுவதும் சிவநிந்தனை செய்துவந்தான். பிருகு மன்னன் மனம் வருந்தி சிவபெருமானிடம் நாட்டில் சிவபக்தியை நிலைநாட்ட அருள் புரிய வேண்டினான். அப்போது சிவபெருமானும் ெதன்நாட்டிற்கு அகஸ்தியர் வந்துள்ளார். அவர் மூலம் சிவபக்தியை நிலைபெறச் செய்வோம் என அருளினார். கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணத்தின் போது மூவுலகமும் அங்கே கூடியதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. புவியை சமன் செய்ய அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்பினார் இறைவன். தென்திசைக்கு அகஸ்தியர் வந்ததும் பூமி சமநிலையடைந்தது. பொதிகை மலையில் உள்ள குற்றாலநாதர் கோயில் வைணவ கோயிலாக இருந்தது. திருநீறும், உத்திராட்சமும் அணிந்திருந்த அகஸ்தியரை துவார பாலகர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.அகஸ்தியர் இலஞ்சி குமரனை வழிபட்டு தனக்கு குற்றாலத்தில் நேர்ந்ததைக் கூறினார். அப்போது குமரன், அகஸ்திரை வைணவர் வடிவம் கொண்டு கோயிலுக்குள் சென்று திருமாலை சிவனாக்கி மகுடாகமப்படி வழிபடுவீர் என அருளினார். அகஸ்தியரும் அருவியில் நீராடி வைணவர் வேடத்தில் திருமாலை வணங்க கோயிலுக்குள் சென்றார். அகஸ்தியரை கண்ட வைணவர்கள் குரு என கருதி வணங்கினர். அப்போது பூஜைக்கு தேவையான திரவியம் கொண்டு வருக எனக்கூறி வேதியரை அங்கிருந்து அகலச் செய்து திருமாலை வணங்கி விஸ்வரூபம் எடுத்து ‘குறுகுக குறுகுக குற்றாலநாதரே’ என திருமாலின் தலையில் தன் கையை வைத்து குற்றாலநாதராக ஆக்கினார் என தலபுராணம் கூறுகிறது. இதனால் குற்றால நாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும், அதை போக்க தினமும் காலசந்தி அபிஷேகத்தின் போது 64 மூலிைககளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதித் தைலம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் அர்த்தசாம பூஜையின்போது மூலிகைகள் கொண்டு கசாயம் தயாரித்து இறைவனுக்கு நிவேதனம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதியில் இக்கோயில் வைணவ தலமாக இருந்ததை உணர்த்தும் வகையில் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது.இக்கோயிலில் சுவாமி திருக்குற்றாலநாதராகவும், குழல்வாய்மொழி அம்மையாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சிவமதுகங்ைக தீர்த்தமும், குறும்பலா மரம் தல விருட்சமாகவும், மகுட ஆகமம் படி பூஜைகளும் நடக்கிறது. பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ளது. சித்திரை விசு, ஐப்பசி விசு, மார்கழி திருவாதிரை, நவராத்திரி, ஆவணி மூல திருநாள், ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. தினமும் காலை 6 மணி திருவனந்தல், 7 மணி உதய மார்த்தாண்டம், 8 மணி விளாபூஜை, 9 மணி சிறுகால சாந்தி, நண்பகல் 12 மணி உச்சிகாலம், மாலை 6 மணி சாயரட்சை, இரவு 8 மணி அர்த்தசாமம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோயில் தென்காசி - செங்கோட்டை சாலையில் உள்ளது. நெல்லை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து தென்காசி வரை ரயில் வசதி உள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு பஸ் வசதியும் உள்ளது.

(வியாழன் தோறும்...)

Related Stories: