அரசு கலை அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

உத்திரமேரூர், பிப்.13: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டுதலுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை வகித்து பேசியதாவது. தற்போது உள்ள கிராமபுற சூழ்நிலைகளில் கல்வி மற்றும் திறன் பயிற்சி வேலைவாய்ப்பு பெறுவதில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்த கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ளன. இணையதள சேவைப் பயன்பாடு எல்லோரும் பெற வாய்ப்பு உள்ளது. அதனைப் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை வளப்படுத்தி கொள்ளலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு வேலைவாய்ப்பின் முக்கிய அம்சத்தை உணர்ந்து, கல்வி பயில வேண்டும். படித்த பின் வேலை பெறுவதில் மாணவ, மாணவிகள் முனைப்பு காட்ட வேண்டும். திறமைகள் அனைவருக்கும் இருக்கின்றன. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, மாணவ,மாணவிகளுக்கு இடையே நடந்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் மீனா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஆர்.அருணகிரி, தாசில்தார் அகிலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: