வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை திருப்பத்தூரில் பரபரப்பு அமமுக பிரமுகர் வீடு, ஷாப்பிங் மாலில்

திருப்பத்தூர், பிப்.8: திருப்பத்தூரில் அமமுக மாவட்ட பேரவை செயலாளர் வீடு மற்றும் ஷாப்பிங் மால், ஏலகிரி மலையில் உள்ள ஹாலிடே ரிசார்ட், நட்சத்திர விடுதி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சின்ன குளம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் அதிமுகவில் முன்னாள் மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், அதிமுக பிளவு ஏற்பட்ட பின்பு இவர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்து அமமுக மாவட்ட பேரவை செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர். ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.மேலும் திருப்பத்தூரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஏலகிரி மலையில் ஹாலிடே ரிசார்ட், திருமண மண்டபங்கள், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இவரது தம்பி செந்தில் முருகன் என்பவரும் சேர்ந்து பல்வேறு தொழில் செய்து வருகின்றனர் .இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் சென்னையிலிருந்து வருமான வரித்துறை துணை கமிஷனர் ராஜேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் திடீரென ஞானசேகரன் வீட்டுக்குள் நுழைந்து உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் அவரது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் திருமண மண்டபம், ஏலகிரி மலையில் உள்ள ஹாலிடே ரிசார்ட், நட்சத்திர விடுதி பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஞானசேகரன் வீட்டில் அவரது தாய் மற்றும் தம்பி செந்தில் முருகன் ஆகியோர் இருந்தனர். ஞானசேகரன் சொந்த வேலை காரணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவர் அங்கிருந்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து அவரிடம் வருமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கணக்கில் வராத நகைகள் உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.இவரது வீட்டில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும், பொருட்களையும் கைப்பற்றி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது 2வது முறை இவரது வீடு மற்றும் பல்வேறு பகுதிகளில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: