8 மாத நிலுவை சம்பளம் கேட்டு 18வது நாளாக பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்களும் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, டிச. 6: ராணிப்பேட்டையில் 8 மாத நிலுவை சம்பளம் கேட்டு 18வது நாளாக பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராணிப்பேட்டை பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் 28 பேருக்கு கடந்த 8 மாதமாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்படவில்லை. இதனைக்கண்டித்து சங்க தலைவர் வேலு தலைமையில் ஊழியர்கள் பெல் நுழைவு வாயில் முன் கடந்த 18 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த போராட்டத்தில் சம்பளம் மற்றும் போனஸ் உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல் ராணிப்பேட்டை பெல் ஸ்டாப் யூனியன், எம்ப்ளாய்ஸ் யூனியன் இணைந்து பெல் நுழைவு வாயிலில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பெல் ஸ்டாப் யூனியன் பொதுச் செயலாளர் பாண்டியன், எம்ளாய்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.5 வருட ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்தவேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை டெல்லியில் வரும் 21ம் நடைபெற உள்ள கூட்டத்தில் உடனடியாக அறிவிக்க வேண்டும். ஊதிய மாற்றத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: