ஆட்டோ டிரைவரை கொலையில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட் தீர்ப்பு குடியாத்தம் அருகே

வேலூர், நவ.2: குடியாத்தம் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சாமரிஷிகுப்பத்தை சேர்ந்தவர் சார்லஸ்(23). இவர், உடல்நிலை சரியில்லாத அதே பகுதியை சேர்ந்த கார்த்தி(25) என்பவரை கடந்த 2014ம் ஆண்டு தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அழிஞ்சிகுப்பம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த தினேஷ், ராஜா, உதயவாணன், தென்னரசு ஆகிய 4 பேர் மீது ஆட்டோ உரசியது.அவர்களை கண்டுகொள்ளாமல் சென்ற சார்லஸ், கார்த்திக்கை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அழிஞ்சிகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே ராஜா உட்பட 4 பேரும் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சார்லசை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சார்லஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேல்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அழிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ்(23), ராஜா(25), உதயவாணன்(21), தென்னரசு(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் நேற்று விசாரித்து தினேஷ் உட்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அண்ணாமலை ஆஜரானார்.

Related Stories: