கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓக்கள் சிறுவிடுப்பு போராட்டம் லேப்டாப்கள் ஒப்படைப்பு தமிழகம் முழுவதும்

அரக்கோணம், நவ.1: தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், லேப்டாப்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் 290 தாலுகாக்கள் உள்ளன. 1189 பிர்க்காக்களும், 16,682 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவை வருவாய்த் துறை முழுவதும் கணினி மயமாக மாறி வருகிறது. இதையடுத்து ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவைகள் மூலமாக பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகளை விஏஓக்கள் மேற்கொள்வதற்காக லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்துவதற்கு சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடம் மற்றும் நெட் கனெக்சனுக்கான செலவு தொகை கொடுக்கவில்லை.எனவே மோடம், நெட்கனெக்ஷன் தொகை வழங்க வலியுறுத்தி ஏற்கனவே விஏஓக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மீண்டும் 5 கட்ட போராட்டங்களை நடத்துவதென முடிவு செய்தனர்.

அதன்படி மாநிலம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த விஏஓக்கள் நேற்று ஒருநாள் மட்டும் சிறுவிடுப்பு எடுத்து முதல்கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இ-அடங்கல் கணினியில் பதிவேற்றும் பணியினை புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து லேப்டாக்களை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் காலை 10 மணியளவில் திருப்பி ஒப்படைத்தனர். இதனால் மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதுகுறித்து வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ஜீவரத்தினம் கூறுகையில், மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஏஓக்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் தாலுகா அலுவலகங்களில் லேப்டாப்களை திருப்பி ஒப்படைத்தனர். எனவே விடுபட்ட அனைத்து விஏஓக்களுக்கும் லேப்டாப்கள் வழங்க வேண்டும். மோடம், நெட் கனெக்சன்களை வழங்க வேண்டும்.

இல்லையென்றால் வரும் 8ம் தேதி கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம கணக்குகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பது. வரும் 12ம் தேதி வட்ட அளவில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது. 19ம் தேதி ஒரு நாள் சிறுவிடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் முன் முழுநேர ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.மேலும், அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து மாநில அளவிலான பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 24ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 350க்கும் மேற்பட்ட விஏஓக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்’ என்றார்.

Related Stories: