தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலைகள் மூலம் 800 மெகாவாட் மின் உற்பத்தி

தூத்துக்குடி,அக்.16: தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அளித்த பேட்டி:

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேதிப்பொருட்கள் மற்றும் அமிலங்களை அகற்றும் பணி 90 சதவீதம் முடிவடைந்தது.  இன்னும் ஆலையிலிருந்து தாமிரதாது உள்ளிட்ட சில  பொருட்களையும் பூமிக்கடியில் உள்ள அமிலங்களை மட்டும் எடுக்க வேண்டியுள்ளது. அதை எடுக்காவிட்டால் தண்ணீர் மாசுபாடு மற்றும் வேறு ஆபத்துகள் ஏற்படும் என்பதால் அது குறித்து விரைவில் சிறப்பு குழு அமைத்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டும் காற்றில் எஸ்ஓ 2 அளவு அதிகரித்துள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டு தகவல் தெரிவிக்கப்படும்.

 ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிலங்களில் அனுமதியின்றி காற்றாலைகள் அமைக்கப்படுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட காற்றாலை நிறுவனங்களிடம் பேசி அதை அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரையில் காற்றாலை மூலம் சுமார் 800 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இரு நிறுவனங்கள் காற்றாலை அமைக்க அனுமதி பெற்று அதற்கான பணிகளை துவங்கியுள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக காற்றாலைகள் அமையவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: