மானிய விலையில் மானிய விலையில் வேளாண் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,அக்.11: வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு 2018-19ம் நிதியாண்டில், மானியவிலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்த ரூ.316.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிராக்டர்கள், பவர் டிரில்லர்கள், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் இயந்திரம், சுழல் கலப்பை, விசைக்களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும்கருவி, நிலம்சமன்செய்யும் கருவி, தட்டைவெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான்,

டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் இயந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கி பயன்பெறலாம். மேலும் மத்தியஅரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணைஇயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி சிறு,குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிக ளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானிய தொகை இவற்றில் எதுகுறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலையுள்ள இயந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி வேளாண் இயந்திரங்களை மானியத் தில்பெற்றிட விவசாயிகள்,

உழவன்செயலியில் தனது ஆதார்எண்ணுடன் பதிவுசெய்ய வேண்டும். வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 19 டிராக்டர்கள், 19 பவர் டிரில்லர்கள், 75 இதர வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ76.36 லட்சங்களும், 16 வாடகை மையங்கள் அமைக்க ரூ160 லட்சங்களும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெறவிரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவுசெய்து, பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: