108 ஆம்புலன்சுக்கு மருந்து விநியோகத்தில் 40 சதவீதம் முறைகேடு ஊழியர் சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு அரசு மாதந்தோறும் ₹25.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

வேலூர், அக்.5: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களுக்கு மருந்து விநியோகம் செய்வதில் 40 சதவீதம் முறைகேடு நடப்பதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.தமிழகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில், ஆம்புலன்ஸ்களை சரியாக பராமரிக்காமல் இருப்பதாகவும், மருந்துகள் சப்ளை செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஊழியர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டி உள்ளனர். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது: 108 ஆம்புலன்ஸ்களுக்கு சப்ளை செய்யப்படும் டிஞ்சர், காட்டன் பற்றாக்குறையாக உள்ளது. இதுகுறித்து ஊழியர்கள் புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ‘விபத்தில் சிக்குபவர்களுக்கு காட்டன் குறைந்தளவு பயன்படுத்தினால் போதுமானது. நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. விரைவாக கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது மட்டுமே உங்கள் கடமை’ என்று கூறுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட கிலோ மீட்டரை தாண்டி தேய்ந்து போன பழைய டயர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆம்புலன்ஸை வேகமாக இயக்க சிரமப்படுகிறோம்.

ஒவ்வொரு ஆம்புலன்சிற்கும் மருந்துவழங்க மாதந்தோறும் தலா ₹3 ஆயிரம் வீதம் தமிழக அரசால் சுமார் ₹25 லட்சத்து 50 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், 3 அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே அதிகாரிகள் மருந்துகள் விநியோகம் செய்கின்றர். இதனால் மருந்து வழங்க ஒதுக்கிய நிதியில் 40 சதவீதத்துக்கும் மேல் கையாடல் நடந்துள்ளது. இதுகுறித்து தணிக்கை செய்ய வேண்டிய அதிகாரிகளும் அலட்சியமாக இருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். வலிப்பு நோய்க்கு மாத்திரை கிடையாது108 ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்படும் நோயாளிகளுக்கு மாரடைப்பு, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்க மாத்திரைகள் வழங்கப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் ஆம்புலன்ஸ்களுக்கு வழங்கவில்லை. இதனால், வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் வழங்கக்கூடாது. இதனால், வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் 108 ஆம்புலன்ஸ்களுக்கு சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறது’ என்றனர்.

Related Stories: